/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வன எல்லை கிராமங்களில் உலா வரும் சிறுத்தை: கால்நடைகளை வேட்டையாடுவதால் மக்கள் அச்சம்
/
வன எல்லை கிராமங்களில் உலா வரும் சிறுத்தை: கால்நடைகளை வேட்டையாடுவதால் மக்கள் அச்சம்
வன எல்லை கிராமங்களில் உலா வரும் சிறுத்தை: கால்நடைகளை வேட்டையாடுவதால் மக்கள் அச்சம்
வன எல்லை கிராமங்களில் உலா வரும் சிறுத்தை: கால்நடைகளை வேட்டையாடுவதால் மக்கள் அச்சம்
ADDED : அக் 24, 2025 11:54 PM

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட, கொழுமம் குப்பம்பாளையம், சங்கராமநல்லுார் தெற்கு மற்றும் அம்மாபட்டி, ஆத்துார் உள்ளிட்ட வன எல்லை கிராமங்களில், கடந்த, ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று உலா வருகிறது.
கிராமங்களிலுள்ள நாய்கள் மற்றும் தோட்டத்துச்சாளைகளில கட்டி வைக்கப்பட்டுள்ள, ஆடு, கன்று குட்டிகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
வன எல்லை கிராமங்களிலுள்ள புதர்கள் மற்றும் கைவிடப்பட்ட கல் குவாரியில் பதுங்கியுள்ள சிறுத்தை, எதிர்பாராத விதமாக மக்கள் வசிப்பிடங்களுக்குள் வந்து, வேட்டையாடி வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சுற்றுப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சிறுத்தையின் கால் தடம் பல இடங்களில் பதிவாகியிருந்ததால், சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
வன எல்லையில் அமைந்துள்ளதால், வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மீண்டும் கிராமத்திற்குள் சிறுத்தை வராமல் இருக்கவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து, கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும், ஆடு, கன்று, நாய்களை வேட்டையாடி 'ருசி' கண்ட சிறுத்தை, தொடர்ந்து மக்கள் வசிப்பிடங்களை நோக்கி வருகிறது. எனவே, சிறுத்தை ஊருக்குள் நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள், விவசாயிகள், தமிழக முதல்வர், வனத்துறை, பேரூராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த ஒரு மாதமாக சங்கராமநல்லுார் தெற்கு கிராமத்திற்குட்பட்ட ஆத்துார், அம்மாபட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில், பாதுகாப்பிற்காக வளர்க்கப்பட்டு வரும் நாய்கள் மற்றும் ஆடு, மாடுகளின் கன்றுகளை, சிறுத்தை தொடர்ந்து வேட்டையாடி, தின்று வருகிறது.
கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்தான முறையில் சுற்றி வருகிறது. உயிர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சிறுத்தையை வனத்திற்குள் விரட்ட, கடந்த, 10 நாட்களாக வனத்துறையினர் தேடுதல் பணி மேற்கொண்டும் எந்த பயனும் இல்லை.
இதனால், இப்பகுதியிலுள்ள பொதுமக்கள், விவசாயிகள் அச்சத்துடனே வாழும் நிலை உள்ளது. எனவே, மீண்டும் கிராமப்பகுதிகளுக்குள் சிறுத்தை வராதவாறு உரிய நடவடிக்கை எடுக்கவும், கால்நடைகள், மனிதர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

