ADDED : ஜன 16, 2026 05:43 AM
பல்லடம்: பல்லடம் அடுத்த கரடிவாவி, மலையம்பாளையம் கிராமப் பகுதிகளில் சிறுத்தை உலா வந்ததாக
பொதுமக்கள் சிலர் கூறியது, பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட வனத்துறையினர், காலடித்தடங்களை ஆய்வு செய்ததில், அவை, நாய் மற்றும் மான் காலடித்தலங்கள் என்பதை உறுதி செய்தனர். தற்போது, அய்யம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை உலா வந்ததாக மீண்டும் பீதி கிளம்பியுள்ளது.
''நேற்று காலை அய்யம்பாளையம் -- அனுப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் உலா வந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்து மக்காச்சோள காட்டுக்குள் புகுந்தது. இதை, இப்பகுதியில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் வீடியோ எடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர் இப்பகுதியினர். பொதுமக்களின் அச்சத்தை போக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

