ADDED : ஆக 06, 2025 11:05 PM

திருப்பூர்; நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், நதிக்கரையில் உள்ள செம்மாண்டம்பாளையம் புதுார் பகுதியில், 'நொய்யல் ஆறு நன்னீருக்கான இயக்கம்' துவங்கப்பட்டுள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் இதை முன்னெடுத்துள்ளனர். அதன், மாநில தலைவர் சண்முகம், செயல் தலைவர் வெற்றி, ஏர்முனை இளைஞர் அணியின் சுரேஷ், தனபால், நிசாந்த் உள்ளிட்ேடார் பங்கேற்றனர்.மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
ஒரு காலத்தில் நன்னீர் ஓடும் ஆறாக இருந்த நொய்யல், இன்று, மாசு நிறைந்த நீர் ஓடும் ஆறாக மாறியிருக்கிறது. நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால், நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள தென்னை உள்ளிட்ட பயிர் விளைச்சல் பாதித்துள்ளது. கால்நடைகளுக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை. நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தான் இந்த இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விவசாய அமைப்பு, அரசியல் கட்சிகள் என எந்தவொரு பாகுபாடின்றி, அனைத்து தரப்பு மக்கள், விவசாயிகளை ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். நொய்யல் நதி சார்ந்த பகுதிகளில் விவசாயிகள், மக்களை குழுவாக ஏற்படுத்தி, நொய்யலில் குப்பை கொட்டுவது, கழிவுகளை கொட்டுவதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பணியை மேற்கொள்ளச் செய்வது என திட்டமிட்டுள்ளோம் .