/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொற்களே விதையாகட்டும்... செயல்கள் விருட்சமாகட்டும்!
/
சொற்களே விதையாகட்டும்... செயல்கள் விருட்சமாகட்டும்!
சொற்களே விதையாகட்டும்... செயல்கள் விருட்சமாகட்டும்!
சொற்களே விதையாகட்டும்... செயல்கள் விருட்சமாகட்டும்!
ADDED : செப் 29, 2024 02:00 AM
சுங்கவரி வருவாய் ரூ.6,800 கோடி
இந்தியா தற்போது வேகமான வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. பொருளாதாரமும் வலுவாக கட்டமைக்கப்படுகிறது. துாத்துக்குடி துறைமுகத்தில், 17 சரக்கு முனையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச பெட்டக தளமாக மாற்றப்பட்டுள்ளதால், ஏற்றுமதி சரக்கை நேரடியாக அனுப்பி வைக்கலாம். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இவ்வசதியை சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, அரசுக்கு கணிசமான சுங்கவரி வருவாய் கிடைக்கிறது. கடந்த, 2020-21ம் ஆண்டில், 5,000 கோடி ரூபாயாக இருந்து, 2022-23ல், 5,800 கோடியாக உயர்ந்தது. இது, கடந்த நிதியாண்டில் (2023-24), 6,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சரக்கு கப்பலிடுவது, 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. தொழில்துறையினருக்கான 'டியூட்டி டிராபேக்' சலுகைத்தொகை, 95 சதவீதம், 5 - 7 நாட்களுக்குள் விடுவிக்கப்படுகிறது. இம்மாதம் மட்டும், 500 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது; மொத்தம், 1,550 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தால், சரக்கு அனுப்புவது எளிதாகியுள்ளது.
துாத்துக்குடியில், மாதந்தோறும், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது; தொழில்துறையினர், தங்கள் பிரச்னை மற்றும் கோரிக்கையை தெரிவித்து தீர்வு பெறலாம்.
- விஜய் கிருஷ்ண வேலவன்
சுங்கவரித்துறை கூடுதல் கமிஷனர்
துாத்துக்குடி
ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்
-------------------------------
கடந்த மாதம், ஏற்றுமதி வர்த்தகம் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, பெரும்பான்மை பங்களிப்புடன் திகழ்கிறது. ஆயத்த ஆடை வர்த்தகம் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு வந்துள்ளது.
வரும் மாதங்களில் மட்டுமல்ல, வரும் ஆண்டுகளிலும், வர்த்தகம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பத்தால், இந்தியாவுக்கான ஏற்றுமதி வர்த்தக ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பெற்றதில், முன்னாள் ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேலின் பங்களிப்பும், முயற்சியும் அலாதியானது. நம் நாட்டிலும், சர்வதேச அளவிலும் சாதகமான சூழல் நிலவுவதால், ஆயத்த ஆடை வர்த்தகம் உச்சகட்ட வளர்ச்சியை தொடும்.
மத்திய அரசின் திட்டங்களால், தொழில்துறையினர் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தால், ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரியை திரும்ப வழங்குவது, 'ரீபண்ட்' வழங்குவது விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு வகையில் உற்பத்தி செலவை குறைத்து, தொழில் நடைமுறைகளை எளிதாக்கினால், நீண்டகால வளர்ச்சி சாத்தியமாகும்.
ஜி.எஸ்.டி.,யை பொறுத்தவரை, 90 சதவீத 'ரீ பண்ட்' தொகை, 7 நாளில் விடுவிக்கப்படுகிறது; முழுமையாக சரிபார்த்த, 60 நாட்களுக்கள் மீதியுள்ள 'ரீ பண்ட்' தொகையும் விடுவிக்கப்படுகிறது.
- தினேஷ் புருஷோத்தம் ராவ்
ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர்
கோவை
ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம்
------------------------------
நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், ஆக., மாதத்தில், 13 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோல், ஜூலை மாத ஏற்றுமதியும், 17.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் மேம்பட்டது திருப்பூர்.
பிரதமர் மோடி கூறியதை போல், 'ஒரு மாவட்டம் ஒரு வர்த்தகம்' என்ற வகையில், திருப்பூர் மாவட்டம், பின்னலாடை ஏற்றுமதியில் சிறந்த மாவட்டமாக உள்ளது. அடுத்தகட்டமாக, 'கிரீன் திருப்பூர்' என்ற பசுமை சார் உற்பத்தி அந்தஸ்தை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
ஏ.இ.பி.சி., முன்னாள் தலைவர் சக்திவேல் வழிகாட்டுதலுடன் செயல்பட்டால், 2030ல், ஒரு லட்சம் கோடி என்ற உயர்ந்த நிலையை திருப்பூர் அடையும். திருப்பூரில், அனைத்து முன்னணி அரசுத்துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளதன் வாயிலாக, ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் வரி மற்றும் நிதிசார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
- சுப்பிரமணியன்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்