/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊர் கூடி ஊருணி காப்போம்! ரம்மியமாக மாறிய ராசாத்தாள் குட்டை
/
ஊர் கூடி ஊருணி காப்போம்! ரம்மியமாக மாறிய ராசாத்தாள் குட்டை
ஊர் கூடி ஊருணி காப்போம்! ரம்மியமாக மாறிய ராசாத்தாள் குட்டை
ஊர் கூடி ஊருணி காப்போம்! ரம்மியமாக மாறிய ராசாத்தாள் குட்டை
ADDED : டிச 01, 2024 01:09 AM

'ஊர் கூடி தேர் இழுப்போம்' என்பதை சற்று 'ஊர் கூடி ஊருணி காப்போம்' என்ற வகையில், முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது, நீர் சேமிப்பு. குளம், குட்டை, நீர்நிலைகளை பேணி பாதுகாப்பது, காலத்தின் அவசியமாகி விட்ட நிலையில், மழை மறைவு பகுதியாகவும், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் நிறைந்த பகுதியாகவும் விளங்கும் திருப்பூரில், நிர்மூலமான நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், வழித்தடம் அடைபட்டு, தடைபட்டு கிடக்கும் குளம், குட்டைகளை துார்வாரி சுத்தப்படுத்தும் பணியில், தன்னார்வ அமைப்பினர் கை கோர்த்திருப்பது, திருப்பூரின் பெருமை.
உதாரணமாக, திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட ராக்கியாபாளையத்தில், 5.50 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குளம் உள்ளது. நொய்யல் கிளை வாய்க்கால் வாயிலாக வரும் மழைநீரில் இக்குளம் நிரம்புகிறது.
பூண்டி நகராட்சி ஒப்புதலுடன், ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனில் இயங்கும் ஜகன்மாதா ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்பாள் டிரஸ்ட் நிறுவனத்தினர் இக்குளத்தை துார்வாரி சுத்தம் செய்து, குளத்தை சுற்றி அழகு நடைபாதை மற்றும் தடுப்புவேலி அமைத்து ரம்மியமான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதேபோல், பல்வேறு இடங்களில் தன்னார்வ அமைப்பினர் குளம், குட்டைகளை துார்வாரி, சுத்தம் செய்து வருகின்றனர். மழைநீர் மட்டுமே வழிந்தோடி வந்த குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில், சமீப ஆண்டுகளாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து வருகிறது.
திருமுருகன்பூண்டி நகராட்சியில், 15 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, 27 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரையும் சுத்திகரித்து வெளியேறும் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. 'இத்திட்டம் முழுமை பெற்றால், ராசாத்தா குளத்தில், முந்தைய காலம் போன்று நன்னீர் தேங்கும்' என்கின்றனர், அப்பகுதி மக்கள்.

