/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய சரித்திரம் படைப்போம் லஞ்சம் - ஊழல் இல்லா தேசம் மலரட்டும்
/
புதிய சரித்திரம் படைப்போம் லஞ்சம் - ஊழல் இல்லா தேசம் மலரட்டும்
புதிய சரித்திரம் படைப்போம் லஞ்சம் - ஊழல் இல்லா தேசம் மலரட்டும்
புதிய சரித்திரம் படைப்போம் லஞ்சம் - ஊழல் இல்லா தேசம் மலரட்டும்
ADDED : டிச 09, 2024 05:28 AM

புரையோடிப்போன லஞ்சமும், ஊழலும், ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்துள்ளன; தேச வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் தடைக்கல்லாகி இருக்கின்றன. முன்பு, கடமைகளை மீறுவதற்காக லஞ்சம் கொடுப்பர்;
தற்போதோ, கடமையைச் செய்வதற்கே லஞ்சம் தர வேண்டியிருக்கிறது. அடிமட்டத்தில் இருந்து இக்கொடுமையைத் துடைத்தெறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. டிச., 9ம் தேதி (இன்று) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. லஞ்சம் - ஊழலுக்கு எதிராக ஒவ்வொருவரும் சபதம் மேற்கொண்டால்தான் நற்சமுதாயம் மலர்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
ஊழல்வாதிகளுக்கு சிறைதான் ஏற்ற இடம்
நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் - ஊழல் தலைவரித்தாடுகிறது. அரசின் திட்டங்களில் அதிகளவில் முறைகேடுகள் நடக்கின்றன. மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயம் ஏற்படுகிறது. கடந்த, ஓராண்டில் மட்டும், 21,660 லஞ்சப் புகார்கள் அளிக்கப்பட்டதில், இரு எப்.ஐ.ஆர்., மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆதாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஒரே தீர்வு, முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டில் புகார் அளித்தால், தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க உத்தரவிடும் விதமாக சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.
- அண்ணாதுரை, தலைவர், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு, பல்லடம்.
லஞ்சத்துக்கு எதிராக மக்கள் திரள வேண்டும்
பொதுமக்கள் தங்கள் பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் போது, அவர்கள் கேட்பதற்கு முன்னால் கொடுத்த பழக்கம், தற்போது லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் இப்படி ஆரம்பித்து, அரசு அலுவலகம், அரசியல் கட்சிகள் என, எங்கும் பணமில்லாமல் வேலை செய்வதில்லை. இதை மாற்றும் சக்தி மக்கள் மத்தியில் உள்ளது. முதலில், நோட்டுக்காக ஓட்டை விற்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுக்கும் சில பரிசுப்பொருட்களுக்கு ஆசைப்பட்டு ஓடும் போது, பின் அவர்கள் பதவிக்கு வந்த உடன், அதை சம்பாதிக்க நம்மிடம் கைநீட்டுவர். குடியிருப்பு பகுதியில் ரோடு போடும் பணியில் கூட, குறிப்பிட்ட கமிஷன் பெற்று அரைகுறையாக போட்டு செல்கின்றனர். இதையெல்லாம் மக்கள் கண்காணித்து எதிர்ப்பு தெரிவித்தால், மாற்றம் ஏற்படும். லஞ்சம்- ஊழலை ஒழிக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்.
- மோகன்குமார், பனியன் வியாபாரி, கருவம்பாளையம்
ஊழலில் திளைத்தவரை மக்கள் கொண்டாடலாமா?
சுவாமி விவேகானந்தர், 'சுயநலம் ஒழுக்கக்கேடு' என்று கூறுகிறார். பெற்றோர் வளர்ப்பு, ஆசிரியர் நல்வழிகாட்டுதலில் இருந்துதான் 'நல்ல தலைவன்' வருகிறார். ஒவ்வொரு துறையிலும், தரம் கடைபிடித்தாக வேண்டும். லஞ்சம்-ஊழல் குறித்து பள்ளியில் இருந்து போதித்து, புரிய வைக்க வேண்டும். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்த வேண்டும். பணத்தின் மதிப்பு தெரிந்த அளவுக்கு, தர்மத்தின் மதிப்பு தெரியாமல் உள்ளது. இந்தத் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையென்றால், அடுத்த தலைமுறை ஊழலை ஒழிக்க வரமாட்டார்கள். லஞ்சம், ஊழலுக்கு எதிராக மனதார உறுமொழி எடுத்து கடைபிடிக்க வேண்டும். ஊழலில் மூழ்கியவர்களை போற்றிக் கொண்டாடுகிறோம். யாரைக் கொண்டாட வேண்டும், யாரைக் கொண்டாடக்கூடாது என்று கூட மக்கள் மத்தியில் தெளிவு கிடையாது. நல்லவனாக இருப்பவன், வல்லவனாக இல்லாததால் தான் ஊழலை ஒழிக்க முடியாமல் உள்ளது.
தீய பழக்கமான ஊழல், லஞ்சம் ஊழலை ஒழிக்க அனைவரும் அன்றாடம் பாடுபட்டால் தான், எதிர்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். சட்டத்தில் மாற்றம் கொண்டு, கடுமையாக்க வேண்டும்.
- செந்தில்நாதன், நிர்வாக அறங்காவலர், ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம், திருமுருகன்பூண்டி.
இளம் தலைமுறையினருக்கு உணர்த்துவது அவசியம்
லஞ்சம், ஊழலை தடுப்பது மக்களான நம் கையில் தான் உள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்குவதில் துவங்கி, இறப்பு சான்றிதழ் வாங்கும் வரை தொடர்கிறது. இதை தடுக்கவும், குறைக்கவும் முதலில் மக்கள் எந்த விஷயத்துக்கும் லஞ்சம் கொடுக்கவும் கூடாது; அதேபோல் வாங்கவும் கூடாது. இந்த மாற்றம் ஒவ்வொருவரிடம் இருந்து உருவாக வேண்டும். இதுகுறித்து இளம் தலைமுறையினருக்கு பள்ளி, கல்லுாரிகளில் போதிக்க வேண்டும். இதனால் நாட்டில் ஏற்படும் பாதிப்பு குறித்து புரிய வைத்து நல்வழிப்படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினர் லஞ்சம், ஊழல் இல்லாத சமுதாயத்தில் வாழ முடியும்.
- திவ்யா, உதவி பேராசிரியர், திருப்பூர்.