ADDED : மார் 03, 2024 11:40 PM

திருப்பூர்;போலியோவை அறவே ஒழிக்க, பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலானகுழந்தைகளுக்கு நேற்று, காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் 1,154 மையங்களில், ஒரு லட்சத்து, 98 ஆயிரத்து, 756 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க, மாவட்ட சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்திருந்தது.
முகாம் துவங்கிய முதல் ஒரு மணி நேரம் ஓரிருவர் மட்டுமே வந்தனர். காலை, 10:00 மணிக்கு பின், மதியம் வரை தாய்மார்கள் பலர் கைக்குழந்தைகளுடன் வந்தனர்.
மாலையில் சற்று குறைந்த கூட்டம், முகாம் முடியும் நேரத்துக்கு அரை மணிநேரம் முன்பாக சுறுசுறுப்பானது. நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டுமருந்து வினியோகிக்கப்பட்டது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகள் சொட்டு மருந்து சுவைத்தன. நேற்று நாள் முழுதும் சேர்த்து, ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து, 005 குழந்தைகளுக்கு (99.1 சதவீதம்) சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரி வித்தனர்.
முன்னதாக முத்துார் அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமை அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்தார்.
திருப்பூர் - பல்லடம் ரோட்டில் உள்ள நகர் நல மையத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ், சொட்டுமருந்து முகாமை துவக்கிவைத்தார்.
மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் பவன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

