/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படகு இல்லத்துக்கு ஜாலி 'டிரிப்' போகலாம்
/
படகு இல்லத்துக்கு ஜாலி 'டிரிப்' போகலாம்
ADDED : ஏப் 05, 2025 11:30 PM

''விடிஞ்சா பனியன் கம்பெனி; மாலையில் அடைஞ்சா வீடு. வாரம் முழுதும் வேலை வேலைன்னே பம்பரமா சக்கரம் போல சுழல்கிறோம். விடுமுறை நாள்ல குடும்பத்தோட பொழுதுபோக்கணும்னா திருப்பூர்ல இருக்கறது தியேட்டரும், மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவும் மட்டும்தான். இதைவிட்டா ஜாலியா பொழுதுபோக்க, வேற இடம் இல்லையே.''
திருப்பூரில் இப்படிப்பட்ட புலம்பல்கள், சுற்றுலாத்துறையின் காதில் விழுந்திருச்சு. இதனாலதான், ஊட்டி போட்ஹவுஸ் போலவே திருப்பூரிலும் ஒரு போட்ஹவுஸ் உருவாக்கிட்டாங்க.
திருப்பூர் - மங்கலம் ரோட்டுல, இயற்கை எழில் கொஞ்சும் ஆண்டிபாளையம் குளத்தில்தாங்க படகு இல்லம் அமைஞ்சிருக்கு. திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து எட்டே கிலோ மீட்டர். மங்கலம் போற பஸ்ஸை பிடிச்சா, படகு இல்லத்தில் இறங்கிடலாம். டூவீலர், கார் பார்க்கிங் வசதியும் இருக்கிறது.
படகு இல்ல வளாகத்தில், சிறுவர் பூங்கா, பார்வையாளர் மாடம், படகு சவாரி எல்லாம் இருக்குது. துாரி உள்பட விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய சிறுவர் பூங்காவில் உங்க குட்டீஸை துள்ளிக்குதித்து விளையாட விட்டீங்கன்னா, ஒரு மணி நேரம் போறதே தெரியாது.
படகு இல்லத்தில், குளத்தில் சவாரி செல்ல, 13 படகுகளும், மீட்பு பணிக்காக ஒரு படகும் உள்ளன. எட்டு பேர் பயணிக்கும் வகையில் தலா 2 மோட்டார் படகுகள்; நான்கு பேர் பயணிக்கும் வகையில் 3 துடுப்பு படகு மற்றும் 8 பெடல் படகுகள் உள்ளன.
குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, ரசனைக்கு ஏற்ப விருப்பமான படகில், குளத்துக்குள் 'ரவுண்ட்' அடிக்கலாம். ஜிலுஜிலுன்னு காற்று வாங்கிக்கொண்டே, குளத்தில் ததும்பும் நீர், துள்ளிக்குதிக்கும் மீன்கள்; குளத்தின் நடுவே மரம் செடி கொடிகளோடு பச்சைப்பசேல் என காட்சி அளிக்கும் தீவுத்திடல்களின் ரம்யம்; பறந்துவந்து கண்ணுக்கு விருந்தளிக்கும் பலவிதமான பறவைகளையெல்லாம் ரசித்தபடி, இயற்கையோடு முழுமையாக ஒன்றியபடி, படகு பயணம் செல்லலாம். நினைவுகளை எதிர்காலத்தில் அசைபோட்டு மகிழ, புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
படகு இல்ல கரையில் உயர்ந்து நிற்கும் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கொண்டு, ஸ்நாக்ஸ் கொறித்தபடியே, குளத்தின் முழு அழகையும், ஆடி அசைந்து செல்லும் படகுகளையும் கண்டு இன்புறலாம்.
கட்டணம் எவ்வளவு?
படகு இல்லத்துக்கு நுழைவுக்கட்டணம் கிடையாது. பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்காவையும் இலவசமாக பயன்படுத்தலாம். மோட்டார் படகில் 20 நிமிட சவாரிக்கு, நபருக்கு 100 ரூபாய்; 4, 5 இருக்கை பெடல் படகு மற்றும் 5 இருக்கை துடுப்பு படகுகளில் 30 நிமிட சவாரிக்கு நபருக்கு 100 ரூபாய்; 2 இருக்கை பெடல் படகிற்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.
நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பம், படகு சவாரிக்கு 400 ரூபாய்; ஐஸ்கிரீம் மற்றும் ஸ்நாக்ஸ்க்கு, 300 முதல் 400 ரூபாய்னு, 800 ரூபாய் செலவு செய்தாலே போடும், செமையா என்ஜாய் பண்ணிட்டு வரலாம்.
4 மாதத்தில், 25 ஆயிரம் பேர்
ஆண்டிபாளையம் படகு இல்லத்துக்கு, வார நாட்களில் சராசரியாக நாளொன்றுக்கு 100 பேரும்; சனி, ஞாயிறு ஆகிய இரு விடுமுறை நாட்களில் தலா 250 பேரும் வருகை தருகின்றனர். கடந்த டிசம்பர் முதல் மார்ச் வரையிலான நான்கு மாதங்களில், 25 ஆயிரம் பேர் படகு இல்லத்துக்கு வந்து, குளத்தில் படகு சவாரி செய்துள்ளனர்.
சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளதால், படகு இல்லத்துக்கு மக்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாகசங்களை விரும்புபவர்களுக்காக, 'ஜெட்கீ' எனப்படும், அதிவேகமாக செல்லும் போட் ஒன்று விரைவில் படகு இல்லத்துக்கு வர உள்ளது.
பரீட்சை முடித்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதால், வரும் நாட்களில் மக்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
சிறுவர் பூங்காவில் கூடுதல் விளையாட்டு உபகரணங்களை நிறுவுவது; திறந்த வெளி திரையரங்கு, அலங்கார விளக்குகள், செல்பி பாய்ன்ட் என படகு இல்லத்தில் மேலும் கூடுதல் அம்சங்களை கொண்டுவரும் திட்டமும் உள்ளது. மக்களின் ஆதரவை பொறுத்து, அடுத்தடுத்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- அரவிந்த்குமார்
திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர்.