/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடிகளில் தோட்டம் அமையுங்க!
/
அங்கன்வாடிகளில் தோட்டம் அமையுங்க!
ADDED : ஆக 20, 2025 09:19 PM
உடுமலை; அங்கன்வாடியில் சத்துணவு தயாரிக்க பயன்படும் வகையில், தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், 2 வயது முதல் 5 வயதுடைய குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, சத்துள்ள உணவு வகைகளை வழங்க அரசு தோட்டம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
குறிப்பாக, அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை, அதிகரித்து வழங்க வேண்டுமென திட்டமிடப்பட்டது.
இதன் அடிப்படையில், இம்மையங்களுக்கு, இலவசமாக, பப்பாளி மற்றும் முருங்கை மரக்கன்றுகள் வழங்குவதாக கொரோனாவுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இவற்றை, பராமரித்து, அதில் வரும், காய், கனி, முருங்கை கீரைகளை, குழந்தைகளுக்கு உணவாக தயார்படுத்தித்தர வேண்டுமெனவும், அரசு உத்தரவிட்டது.
ஆனால், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், இத்திட்டம் அவ்வாறு முக்கியத்துவம் பெற வில்லை.
மேலும், இடவசதி இருப்பினும், பல மையங்களில் இந்த மரக்கன்றுகள் இல்லை. குழந்தைகளுக்கான சிறப்புத்திட்டத்தை செயல்படுத்துவதில், அரசுத்துறைகள் அலட்சியமாக இருப்பது, பெற்றோரையும் வேதனையடைய செய்கிறது.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அங்கும் மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும், நுாறு சதவீதம் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சமூக நலத்துறையினர் உரிய முயற்சி மேற்கொண்டு, இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.