/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிக்கு படையெடுப்போம்... வேலைக்கு விடைகொடுப்போம்
/
பள்ளிக்கு படையெடுப்போம்... வேலைக்கு விடைகொடுப்போம்
பள்ளிக்கு படையெடுப்போம்... வேலைக்கு விடைகொடுப்போம்
பள்ளிக்கு படையெடுப்போம்... வேலைக்கு விடைகொடுப்போம்
ADDED : ஜூன் 12, 2025 11:29 PM

திருப்பூர்; குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமான நேற்று, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட தொழிலாளர் துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் 'விழுதுகள்' அமைப்பு இணைந்து நடத்திய, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின கலை நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம், திருப்பூரில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காய்த்ரி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், விழிப்புணர்வு பதாகை ஏந்தி, 'விழுதுகள்' கலைக்குழுவினரால், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின், உறுதிமொழி ஏற்கப்பட்டது.ஊர்வலத்தின் போது, 'குழந்தை தொழிலை ஒழிப்போம்; குழந்தைகள் உரிமைகள் காப்போம்; குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்போம். பள்ளிக்கு படை எடுப்போம்; வேலைக்கு விடை கொடுப்போம்' என்பது போன்ற வாசகம் தாங்கிய பதாகை ஏந்தியபடி, முழக்கமிட்டு சென்றனர்.
குழந்தைகள் நாட்டின்எதிர்காலத் துாண்கள்
சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், கல்லுாரி வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்துபேசுகையில், ''குழந்தைகள் நம் நாட்டின் எதிர்கால துாண்கள். அவர்களை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம். அவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிளாளர்களை பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாரிடம், 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்,'' என்றார்.
விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, 'குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிப்போம், அடிப்படை கல்வி அளிப்போம்' என, மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.