/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெசவாளர்களுக்கு கரம் கொடுப்போம்
/
நெசவாளர்களுக்கு கரம் கொடுப்போம்
ADDED : டிச 30, 2024 12:56 AM
கைத்தறி நெசவாளர்களின் நிலை குறித்து எதிர்மறைக் கருத்துகள்தான் அதிகளவில் வலம் வருகின்றன. ஆனாலும், கைத்தறித்துணிகளுக்கென சர்வதேச அளவிலும் விரிந்து பரந்துள்ள சந்தையை உணர்ந்தவர்களுக்கு, கைத்தறியும் லாபம் கிடைக்கும் தொழில்தான்.
அதற்கான விழிப்புணர்வு, நெசவாளர்களிடம் ஏற்பட்டாக வேண்டும்; அதற்கேற்ப அரசின் உதவிகளும் தேவை. அப்போதுதான் நெசவாளர்களுக்கு உரிய பலன் கிடைக்கும்.
திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்த, 47 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன; 10,040 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். காட்டன், கோரா காட்டன், மென்பட்டு சேலை, ஸ்பெஷல் காட்டன், 'டை அண்ட் டை' சேலை, 'லினன்' சேலை ரகங்கள், ஈரிழைத் துண்டு, பெட்ஷீட், 'மேட்' மற்றும் 'டஸ்டர் கிளாத்' ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோரா -காட்டன் சேலை ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் (2023-24), மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் 50.32 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறித் துணி ரகங்களை உற்பத்தி செய்து, 58.22 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி, கைத்தறி மற்றும் துணி நுால் துறை சார்பில், திருப்பூர், குலாலர் திருமண மண்டபத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அளவிலான கைத்தறி ஜவுளி விற்பனை கண்காட்சி துவங்கியுள்ளது.
தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை வரும் ஜன., 11 வரை நடைபெற உள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெசவாளர் சங்கங்களும் பங்கேற்று தங்கள் தயாரிப்புப் பொருட்களைக் காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளன.
ரூ.12.40 கோடி 'முத்ரா' கடன்
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வருவாயை பெருக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உயர்ந்து வரும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டும், கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கும் கூலியில், அடிப்படைக்கூலி மற்றும் அகவிலைப்படியில், 10 சதவீதம் உயர்வு வழங்கப்படுகிறது.
தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பெறும் நடைமுறை மூலதன கடன் தொகைக்கான வட்டியில், 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. திருப்பூர் சரக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில், 1.91 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி ஆதரவுத் திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், இரண்டு கோடியே, 33 லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 2,080 தறி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின், நெசவாளர் 'முத்ரா' கடன் திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 2,467 கைத்தறி நெசவாளர்களுக்கு, 12.40 கோடி ரூபாய், வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று கோடியே, 79 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.