/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய வள்ளுவரை போற்றுவோம்...ஆதி பகவன் முதற்றே உலகு!
/
வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய வள்ளுவரை போற்றுவோம்...ஆதி பகவன் முதற்றே உலகு!
வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய வள்ளுவரை போற்றுவோம்...ஆதி பகவன் முதற்றே உலகு!
வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய வள்ளுவரை போற்றுவோம்...ஆதி பகவன் முதற்றே உலகு!
ADDED : ஜன 16, 2024 02:26 AM

''உலகிற்கு தாய்தந்தையாக இருந்து அருள்புரிவது ஆதியோகி ஆகிய ஆதிபகவனே என்றுரைத்து, மனிதன் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய திருவள்ளுவரை போற்றி வணங்க வேண்டும்,'' என, கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளார்.தை பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் குறித்து அவர் ஸ்ரீநடராஜ சுவாமி கூறியதாவது:உலக மக்கள் உய்வு பெரும் வண்ணம், அடியார் பெருமக்கள், ஆழ்வார்கள், உலகியல் ரீதியாக பலவழிகளை நமக்கு வழங்கியுள்ளனர். அவ்வகையில், திருவள்ளுவர் இயற்றிய செய்யுளில், இரண்டே வரியில் அனைத்து விஷயங்களையும் புரியும்படியாக இயற்றியிருக்கிறார்.
எப்படி ஆங்கில மொழிகளில் சில அர்த்தங்களை சுருக்கமாக தெரிவிக்கிறோமோ, அதேபோல், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, திருக்குறளில் மிக எளிமையாக தெளிவுபடுத்தி உள்ளார். அறள், பொருள், இன்பம் என்ற பகுதிகளை கொண்டு, மனிதன் வாழ்க்கை நடத்தும் முறையை, திருக்குறளில் விளக்கியுள்ளார்.திருவள்ளுவராகட்டும், தெய்வ சேக்கிழார் பெருமானாகட்டும், தமிழ் சொல்லிலேயே, பெரிய மற்றும் அரிய சொற்களை, சுருங்க சொல்லி புரிய வைத்துள்ளனர். பாண்டிய மன்னன் காலமானதை கூட, 'மண்ணுலகு மகர்க்கீந்து விண்ணுலகு தான் பெற்றார்' என்று நாகரீகமாக சேக்கிழார் பெருமான் கூறியுள்ளார்.கடவுள் வாழ்த்து...அதேபோல், 'தோன்றின் புகழோடு தோன்றுக அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்று வள்ளுவரும் உணர்த்தியுள்ளார். கடவுள் வாழ்த்து பாடலிலேயே, 'ஆதிபகவன்' என்று குறிப்பிட்டுள்ளார். தெய்வ அனுக்கிரகம் இல்லாமல், யாராலும் இத்தகைய சொல்லை பயன்படுத்த முடியாது. இவ்வுலகிற்கே பரம்பொருளாக விளங்குகின்ற பெருமான், ஆதிபகவன்.ஆதி என்றால், முதல் என்பது பொருள்; பகவன் என்பது இறைவனை குறிப்பது. முடிவில்லாத சிவபெருமானே ஆதிபகவன்! அவருக்கு பிறப்பு , இறப்பு கிடையாது. 'அநாதி முக்த ரஹிதன்' என சைவ சித்தாந்த நுால் குறிப்பிடுகிறது.கந்தபுராணத்தில், கச்சியப்ப சிவாச்சார்யார் பாடுகையில், 'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி, ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்' என ஆழமாக குறிப்பிடுகிறார். இன்னும் சிறப்பாக பல மகான்கள், 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்கிறார்கள். இவை அனைத்தும், மனதில் கொண்டு, தெய்வவாக்காக, வள்ளுவ பெருந்தகை, 'அகர முதல எழுத்தெலாம் ஆதிபகவன் முதற்றே உலகு' என்கிறார்.அகர, உகர, மகரம் என்று சொல்லக்கூடிய ஓம்கார பொருள் என்பதே ஆதி சிவன். 1330 குறட்பாக்களில் அருமையான விளக்கத்துடன், மனிதன் வாழ்வாங்கு வாழ வழிகாட்டியுள்ளார் வள்ளுவர். தெய்வங்கள் நமக்கு காட்டும் கருணைக்கு, நாம் செய்கின்ற மிகப்பெரிய நன்றிக்கடன், அவர்களை போற்றுவது, பாடுவது, வழிபடுவது.ஏகன்... அநேகன்!தலை சிறந்த புண்ணியங்களை உருவாக்கும் திருவள்ளுவராண்டு என்கிறோம். காணும் பொங்கல் நாளில், திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுகிறோம். இப்படிப்பட்ட மகான் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
ஆண்டுகள் பல ஆயிரம் ஆயினும் அவர்கள் வழங்கிய புனிதமான திருக்குள் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. எனவே, ஆதிபகவன் என்ற சொல், திருவள்ளுவரை தவிர யாரும் குறிப்பிடவில்லை. ஸ்ரீமாணிக்கவாசகர், சிவபுரணாத்தில், சிவபெருமானை, 'ஏகன் அநேகன் இறைவனடி போற்றி' என்று குறிப்பிடுகிறார்.
அதேபோல், உலகுக்கு தாய்தந்தையாக இருந்து அருள்புரியவது ஆதியோகி ஆகிய ஆதிபவனே என உரைத்து, தை பொங்கல் திருநாளை, உலகில் உள்ள அனைத்து மக்கள், எல்லா வளமும், நலமும் பெற்று நீடு இனிது வாழ ஆதிபகவனை பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.