ADDED : அக் 04, 2025 11:28 PM
பொங்கலுார்: ஐ.டி.பி.எல்., திட்டம் என்பது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், அமைக்கப்பட்டு வரும் எரிவாயு குழாய் திட்டமாகும்; விவசாய நிலங்களுக்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலையோரம் குழாயைப் பதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர்.
''சாலையோரம் கொண்டு செல்லப்படும் என்று தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விளைநிலத்தின் வழியாக பைப் லைன் கொண்டு சென்றால் தடுத்து நிறுத்துவோம்'' என்று பொங்கலுாரில் நடந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கண்டியம்மன் கோவில் மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
தொடர்ந்து, 317 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் ஆகிய போராட்டங்களை நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. சாலையோரமாக கொண்டு செல்லப்படும் என்ற தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க வந்தால் தடுத்து நிறுத்துவது, அவிநாசி பாளையத்தில் நடந்து வந்த காத்திருப்பு போராட்டத்தை உகாயனுாரில் நடத்துவது, அனைத்துக் கட்சி ஆதரவை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் அ.தி.மு.க., மேற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவப்பிரகாஷ், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் கோகுல் ரவி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைச் செயலாளர் கணேசன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநகரச் செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.