/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடிந்து விழும் நிலையில் நுாலக கட்டடம்
/
இடிந்து விழும் நிலையில் நுாலக கட்டடம்
ADDED : ஏப் 09, 2025 07:11 AM

அவிநாசி : அவிநாசியிலுள்ள நுாலகத்தின் மேற்கூரை உள்ளிட்ட இடங்கள் சேதமடைந்துள்ளதால் பாதுகாப்பற்ற சூழலில் வாசகர்கள் உள்ளனர்.
அவிநாசி பேரூராட்சி, 9வது வார்டு பாரதிதாசன் வீதியில் கிளை நுாலகம் உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் படிக்க சென்று வருகின்றனர். ஆனால், நுாலகத்தை முறையாக பராமரிக்காமல் அவலநிலையில் உள்ளது.
உட்புறம், வெளிப்புறம் என, பல இடங்களில் மேற்கூரைகள் சேதமடைந்து விழுந்து வருகிறது. இதனால், வாசகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நுாலகர் சரவணன் கூறுகையில், ''ஒவ்வொரு நிதியாண்டிலும் மாவட்ட நுாலக ஆணைக் குழுவுக்கு கட்டடத்தின் நிலைமையை புகைப்பட ஆதாரத்துடன் மனு அனுப்பப்பட்டுள்ளது. கட்டடம் மிக மோசமாக ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளதை அறிக்கையாக அனுப்பியுள்ளேன். இந்த நிதியாண்டில், அவிநாசிக்கு நிதிகள் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்,'' என்றார்.
பேரூராட்சி தலைவர் தனலட்சுமியிடம் கேட்டபோது, ''கடந்தாண்டு, நுாலக வரி வசூல் செய்து தலைமை நுாலக ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனைப்பற்றி செயல் அலுவலரிடம் தான் கேட்க வேண்டும்,'' என்றார்.
புதிய நுாலகங்கள் அமைப்பதை காட்டிலும், பயன்பாட்டில் உள்ள நுாலகத்துக்கு வரும் வாசகர்களின் அச்சத்தை போக்கும் வகையில், நுாலகத்தை உடனடியாக பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாசகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.