ADDED : நவ 09, 2024 07:07 AM
திருப்பூர்; எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில், கற்போர் எழுத்தறிவு மையம் உருவாக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல், கற்றல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நடப்பாண்டு முதல் தேர்வு வரும், 10ம் தேதி மாநிலம் முழுதும் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,162 மையங்களில், மொத்தம், 16 ஆயிரத்து, 930 பேர் பங்கேற்று, தேர்வெழுத உள்ளனர். மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை கூறுகையில், 'புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் இணைந்தவர்கள், காலை 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை தங்களுக்கு உகந்த நேரத்தில் தேர்வு எழுதலாம். அரசு தொடர்ந்து உதவி செய்து தருவதால், ஆர்வமுள்ளவர்கள் தேர்வெழுத வர வேண்டும்,' என்றார்.