/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை கணக்கெடுப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கால்நடை கணக்கெடுப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 27, 2024 09:24 PM
உடுமலை; 'திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ள நிலையில் இழப்பீடு, மேய்ச்சல் நிலம் தொடர்பான விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாடு முழுக்க ஐந்தாண்டுக்கு ஒரு முறை கால்நடை கணக்கெடுப்புப்பணி நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தான் மத்திய, மாநில அரசுகள் சார்பில், கால்நடை வளர்ப்பு தொடர்பான திட்டங்கள் வகுக்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த, 2019ல், 20வது கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐந்தாண்டு இடைவெளிக்கு பின், தற்போது, 21வது கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது; கணக்கெடுப்பு பணி துவங்கியும் உள்ளது; அடுத்தாண்டு, பிப்., வரை இப்பணி நடக்கும்.
திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணியில், 236 கணக்கெடுப்பாளர்கள் மற்றும், 47 மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், நகர்ப்புறங்களிலும் இக்கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.
விவசாயிகள் சிலர் கூறுகையில், 'கால்நடை வளர்ப்பு பணி என்பதும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. மேய்ச்சல் நிலம், குறைந்துவிட்டது; தெரு நாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; ஆனால், அவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை. தீவனப்பற்றாக்குறை, அவற்றின் விலையேற்றம் என, பல்வேறு பிரச்னைகளை கால்நடை வளர்ப்போர் எதிர்கொண்டுள்ள நிலையில், கணக்கெடுப்பு பணியுடன் சேர்ந்து இத்தகைய பிரச்னைகளுக்கான தீர்வும் அரசு அதிகாரிகளால் ஆலோசிக்கப்பட வேண்டும்,' என்றனர்.