ADDED : டிச 28, 2025 07:11 AM
திருப்பூர்: நம் அண்டை மாநிலமான கேரளாவின், ஆலப்புழா, நெடுமுடி, செருதனா, புறக்காடு பகுதிகளில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான 'ஹெச்5 என்: 1' வைரஸ் பரவி வருவதை, போபால் ஆய்வக சோதனை உறுதி செய்துள்ளது.
இதனால், நோய் பரவுவதைத் தடுக்க, இரு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையை உடனே துவங்க பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள ஒன்பதாறு சோதனைச்சாவடி மாவட்ட கால்நடை மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர், அதிகாரிகள், டாக்டர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள், வருவோர் குறித்த விவரங்களை சேகரிக்கின்றனர்.
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:
கேரளாவில் இருந்து வருவோரின் காய்ச்சல் உள்ளிட்ட உடல் நிலை பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தொடர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதியாகிறவர் எந்த ஊரில் இருந்து வந்தார்,எவ்வளவு நாட்களாக தொந்தரவு என்பது தினசரி 'அப்டேட்' செய்யப்படுகிறது.
மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பு தொடர்வதால், மக்கள் பயப்பட வேண்டியதில்லை. நன்கு வேக வைத்த உணவுகளை உண்பது பாதுகாப்பானது. பறவைகள் ஏதேனும் அசாதாரணமாக உயிரிழந்தால், உடனடியாகக் கால்நடை பராமரிப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

