/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைத்துறை தீவன பெருக்க திட்டம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
/
கால்நடைத்துறை தீவன பெருக்க திட்டம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
கால்நடைத்துறை தீவன பெருக்க திட்டம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
கால்நடைத்துறை தீவன பெருக்க திட்டம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : அக் 17, 2024 10:23 PM
உடுமலை: கால்நடைத்துறை சார்பில், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், செயல்படுத்தப்படும் தீவனப் பெருக்கத்திட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறையை தவிர்க்கவும், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஆண்டு தோறும் பல்வேறு மானிய திட்டங்கள் கால்நடைத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
மாடுகளில் பால் உற்பத்தித்திறன், இனப்பெருக்கம், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடப்பாண்டு, தீவனப் பெருக்கத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இறவையில் பல்லாண்டு பசுந்தீவன சாகுபடியாக, அதிக விளைச்சல் தரக்கூடிய, கோ - 4, கோ - 5 ரக கம்பு நேம்பியர் பசுந்தீவனங்களை, கால்நடை வளர்க்கும் விவசாயிகள், நீர்ப்பாசன வசதி கொண்ட தங்கள் நிலத்தில், 3:1 என்ற விகிதத்தில் வளர்க்கவும், இறவையில், 0.25 ஏக்கருக்கு 375 கிராம், கோ (எப்எஸ்) 29 சோள விதைகள் மற்றும், 500 கிராம் வேலிமசால் தீவனப்பயிர் விதைகள் வழங்கப்படுகிறது.
இப்பயிர்களுக்கு உரங்களாக, 0.25 ஏக்கருக்கு, 10 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும், 7 கிலோ பொட்டாஷ் வழங்கப்படவுள்ளது.
மேலும் களையெடுத்தல், உரமிடுதல், மற்றும் நீர்ப்பாசனத்திற்கும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம், 70 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மானாவாரி நிலப்பகுதியில் தீவனச் சோளம் மற்றும் தட்டைப்பயிறு சாகுபடி திட்டமாக, நீர்ப்பாசன வசதியில்லாத மானாவாரி நிலப்பகுதிகள் கொண்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, 0.5 ஏக்கருக்கு, 6 கிலோ மானாவாரி தீவனச்சோளம் கோ (எப்எஸ்) 27 விதைகள் மற்றும், 2 கிலோ தட்டைப்பயிறு விதைகள் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டம், 200 ஏக்கர் பரப்பளவில், திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதே போல், மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பண்ணை செயல்பாட்டினை எளிமையாக்க, 100 தீவனப்புல் வெட்டும் கருவிகள், 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
கால்நடைத்துறை செயல்படுத்தும் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதியிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, பெயர் பதிவு செய்து கொள்ளுமாறும், கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.