/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்சிப்பொருளாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி; உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்கணும்
/
காட்சிப்பொருளாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி; உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்கணும்
காட்சிப்பொருளாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி; உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்கணும்
காட்சிப்பொருளாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி; உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்கணும்
ADDED : மே 01, 2025 04:24 AM
உடுமலை : அரசுப்பள்ளிகளில், பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை புதுப்பிக்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுத்தமில்லாத குடிநீரினால், மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், குடிநீர் துாய்மையானதாக இருக்க வேண்டும்.
இந்நிலையில், பள்ளிகளில், மாணவர்களுக்கு சுகாதாரம் காக்கும் வகையில், சுத்தமான குடிநீர் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
இதன் அடிப்படையில், உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., பொது நிதிகளில், சில அரசுப்பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, கருவி பொருத்தப்பட்டது.
அவ்வாறு, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் பொருத்தப்பட்ட சுத்திகரிப்பு கருவிகள் அனைத்தும், பழுதடைந்த நிலையில் தான் உள்ளது. இதனால், சுத்தமான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கருவிகளை சரிசெய்ய பள்ளி நிர்வாகத்தினர் விண்ணப்பித்தும், எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பல பள்ளிகளில், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது.மேலும் இக்கருவிகள் தரமில்லாமல் வழங்கப்படுவதால், விரைவில் பழுதடைந்து விடுகின்றன.
மழைக்காலங்களில், குழந்தைகளுக்கு துாய்மையான குடிநீர் வழங்குவதற்கு இக்கருவி பெரிதும் பயனளித்தது. குழந்தைகளுக்கு குடிநீர் வாயிலாகவே, பெரும்பான்மையான தொற்று நோய்கள் பரவுகின்றன. பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அடிப்படையாக தேவையாக உள்ளது.
வீடுகளிலிருந்து குழந்தைகள் குடிநீர் எடுத்து வந்தாலும், பல நேரங்களில் அவை மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. குழந்தைகள் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும், உடல் உஷ்ணம் தொடர்பான பல நோய்கள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அனைத்து பள்ளிகளிலும், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்துவதற்கும், பழுதடைந்த கருவிகளை மாற்றி வழங்குவதற்கும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
அரசும் இந்த விஷயத்தில் தலையிட்டு, உரிய தீர்வு காண வேண்டும் என, அனைத்து தரப்பு பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.