/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளூர் சந்தைகள் மேம்பாடு அவசியம்
/
உள்ளூர் சந்தைகள் மேம்பாடு அவசியம்
ADDED : ஆக 16, 2025 11:09 PM

வா கன போக்குவரத்துக்கு இடையே, ஆபத்தான சூழலில், உள்ளூர் சந்தைகள் நடந்து வரும் நிலையில், இவற்றை முறைப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விசைத்தறி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, கறிக்கோழி உற்பத்தி என, பலதரப்பட்ட தொழில்களால், பல்லடம் பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது.
தொழில் வளர்ச்சியை முன்னிட்டு, தொழிலாளர் வருகையும் அதிகரிப்பதால், மக்கள் தொகையும் உயர்ந்து வருகிறது. வெளி மாநில மாவட்டங்களில் இருந்து, தொழில், வியாபாரம், வேலை காரணமாக, குடும்பத்துடன் குடிபெயர்கின்றனர். தொழிலாளர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை, வியாபாரிகள் பூர்த்தி செய்கின்றனர்.
ஆபத்தான சூழல் பெரிய வியாபாரிகள், நகரப் பகுதிகளில் கடை அமைத்து விற்பனை செய்ய, குறு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர், உள்ளூர் சந்தைகளையே நம்பி உள்ளனர். இவ்வாறு, பல்லடம் வட்டார கிராமங்கள் முழுவதும், பரவலாக சந்தைகள் நடந்து வருகின்றன.
ஆனால், வாகன போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலைகளில், மிகவும் ஆபத்தான சூழலில் தான் இதுபோன்ற சந்தைகள் நடக்கின்றன. இது, வியாபாரிகளுக்கு மட்டுமன்றி, நுகர்வு செய்ய வரும் பொதுமக்களுக்கும் விபத்து அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அலைச்சல் குறையும் கிராம அளவில், சந்தைகள் மேம்பட்டால், நகரப் பகுதிகளை தேடி வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். மேலும், உள்ளூர் சந்தையை மட்டுமே நம்பியுள்ள, ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் பயனடைவர். பொதுமக்களுக்கு, குறைந்த விலைக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதுடன், தேவையற்ற அலைச்சலும் குறையும்.
இவ்வாறு, விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் உள்ளூர் சந்தைகள், பல ஆண்டுகளாகவே மேம்படுத்தப்படாமல் உள்ளன.
விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர், வெயில், மழை என்று பார்க்காமல், திறந்த வெளியில், ஆபத்துக்கு இடையே விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
எனவே, நகரப் பகுதிகளில் உழவர் சந்தைகள் உள்ளதை போல், கிராமப் பகுதிகளிலும் சந்தைகளை மேம்படுத்த வேண்டும்.
உள்ளூர் சந்தைகளை மேம்படுத்துவதன் மூலம், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, அரசிடம் நிதி பெற்று, உள்ளூர் சந்தைகளை உருவாக்கி, விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெற, உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.