/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதார் மையத்துக்கு பூட்டு; பொதுமக்கள் ஏமாற்றம்
/
ஆதார் மையத்துக்கு பூட்டு; பொதுமக்கள் ஏமாற்றம்
ADDED : மே 11, 2025 12:57 AM

பல்லடம்: பல்லடத்தில், தாலுகா ஆபீஸ், பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகம் மற்றும் நகராட்சி வளாகம் ஆகிய இடங்களில் ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
நகராட்சி எல்லைக்கு உட்பட்டு மூன்று இடங்களில் சேவை மையங்கள் இயங்கிய போதும், பொதுமக்கள் எந்நேரமும் ஆதார் மையங்களில் காத்திருக்க வேண்டிய சூழல்தான் உள்ளது.
அந்த அளவுக்கு ஆதார் சார்ந்த பணிகளை பொதுமக்கள் மேற்கொள்கின்றனர். இதற்கிடையே, பல்லடம் நகராட்சி வளாகத்தில் உள்ள ஆதார் மையம், கடந்த, 10 நாட்களுக்கு மேலாக பூட்டிக் கிடக்கிறது. பொதுமக்கள், பூட்டிக் கிடக்கும் கதவை பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து திருப்பூர் 'எல்காட்' நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஆதார் மையத்தில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியருக்கு விபத்து ஏற்பட்டதன் காரணமாக, பல்லடம் நகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் தற்காலிகமாக, மே 19 வரை மூடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் ஆதார் மையம் முன்பு வெளியிடப்பட்டுள்ளது' என்றனர்.
பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு அருகே உள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், நகராட்சி வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தை நாடுகின்றனர். ஆதார் மையம் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைவதுடன், தேவையற்ற அலைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே, ஆதார் மையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.