/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரங்களை வெட்டி கடத்தல்? பொதுமக்கள் குற்றச்சாட்டு
/
மரங்களை வெட்டி கடத்தல்? பொதுமக்கள் குற்றச்சாட்டு
ADDED : செப் 25, 2024 12:21 AM

அவிநாசி : அவிநாசி வாரச்சந்தை வளாகத்தில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி நடந்ததாக, பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அவிநாசி பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை, கைகாட்டிப்புதுார் - ராஜன் நகரில் செயல்படுகிறது. இதில், 4.13 கோடி ரூபாய் மதிப்பில், 144 கடைகள் கட்டப்படுகிறது. இதற்காக, பழைய கட்டுமானங்களை அகற்றி, புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சந்தை வளாகத்தில், புளிய மரங்கள் உள்ள நிலையில், அவற்றை வெட்ட உரிய அனுமதியை நேற்று வரை பேரூராட்சி நிர்வாகம் வாங்கவில்லை. இந்நிலையில், கட்டுமானப் பணிகள் நடக்கும் உள்ள இரண்டு பெரிய புளிய மரங்களை நேற்று முன் தினம் இரவோடு இரவாக கடத்த முயற்சி செய்துள்ளனர்.
பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில், எந்தவித முன் அனுமதியும் பெறாமல் மரத்தை வெட்டியது பேரூராட்சி நிர்வாகமா, ஒப்பந்ததாரரா அல்லது வார்டு கவுன்சிலரின் செயலா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் கூறுகையில், ''வாரச்சந்தை வளாகத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்ததாரர்கள், பொக்லைன் வாயிலாக குழிகள் தோண்டும் போது, இரண்டு மரங்கள் விழுந்து விட்டது. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு வருவாய்த் துறையினருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்,'' என்றார்.
இது குறித்து தாசில்தார் சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது, போன் அழைப்பை ஏற்கவில்லை.