/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு மண்டலத்தில் அடையாளம் இழந்த கொரங்காடுகள்!
/
கொங்கு மண்டலத்தில் அடையாளம் இழந்த கொரங்காடுகள்!
ADDED : மார் 21, 2025 02:05 AM
'விவசாய நிலங்களில் மான், மயில், காட்டுப்பன்றி தொல்லை அதிகரித்து விட்டது' என்பது, விவசாயிகளின் தீராத புலம்பல். இது இன்றோ, நேற்றோ திருப்பூருக்கு வந்ததல்ல. பல ஆண்டுகளுக்கு முன், திருப்பூரில் இயற்கையாய் அமைந்திருந்த கொரங்காடுகளில் நிறைந்து வாழ்ந்தவற்றின் வழித் தோன்றல் தான்.
திருப்பூர், பல்லடம், காங்கயம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி, ஈரோடு, கரூர், திண்டுக்கல் என, கொங்கு மண்டலத்தின் அடையாளமாக இருந்தவை தான், கொரங்காடுகள். புல், மரம், தழைகளை கொண்டு மேய்ச்சல் நிலம் நிறைந்த பகுதி தான் இந்த கொரங்காடுகள். இதில், மான், மயில், காட்டுப்பன்றி, முயல், குள்ளநரி என, ஏராளமான விலங்குகள், கூட்டம் கூட்டமாக வாழ்ந்திருக்கின்றன.
விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளை கொரங்காட்டில் தான் மேய்ச்சலுக்கு விடுவர். மெல்ல, மெல்ல நகரமயமாக்கலை நோக்கி திருப்பூர் நகர்ந்த போது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவதை போன்று, கொரங்காடுகளும் தங்களின் இயல்பை இழக்க துவங்கின.
திருப்பூர் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணன் கூறியதாவது: திருப்பூர், தொழில் நகரமாக உருவெடுக்கும் முன், புதர்காடுகளும், வறண்ட நில புல்வெளிகளும் நிறைந்திருந்தன. கொரங்காடு விவசாய முறை என்பது, ஒரு அடையாளமாகவே இருந்தது. பல்லுயிர் சமநிலைக்கான சிறு, சிறு விலங்கினங்களும் அதிகளவில் வாழ்ந்து வந்தன. தொழில் வளர்ச்சி காரணமாக கொரங்காடுகள் மெல்ல, மெல்ல அழிந்தன. அவற்றின் மிச்சம் தான் இன்று தென்படும் மான்களும், மயில்களும்.
தொழில் நிறுவனங்களால் திருப்பூர் நகரம் நிரம்பியிருந்தாலும், நகரை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் விவசாயமும், பசுமையும் இன்றளவும் செழிக்க அமராவதி அணையும், திருமூர்த்தி அணையும் முக்கிய காரணங்கள். திருப்பூர் நகர மற்றும் ஊரக பகுதிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த பவானி ஆற்றுநீர் தான் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, திருப்பூரின் தொழில் வளர்ச்சி மற்றும் விவசாயம் செழிப்புற, மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் என்பதும், அது சார்ந்த வனப்பகுதிகள் முக்கியமானதாக உள்ளது.
தொழிற்சாலைகள் நிரம்பியிருப்பதால், காற்று மாசு அதிகரித்திருக்கிறது. இதனால், கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தொழிற்சாலை வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரம் வளர்ப்பதன் வாயிலாக, காற்று மாசு பிரச்னையில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இதை உணர்ந்தே தமிழக அரசும், பசுமை தமிழகம், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டம், மரகத பூஞ்சோலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. தன்னார்வ அமைப்பினரும், தங்கள் பங்குக்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கின்றனர்.
தொழில் வளம் பெருகிவிட்ட திருப்பூரில், 'காப்புக்காடு' எனப்படும் அடர்ந்த வனத்தை உருவாக்க சாத்தியமில்லை. அதேநேரம், அதற்கு நிகராக காலி இடங்கள், பட்டா நிலங்கள், சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதால் மட்டுமே வன வளத்தையும், அதனால் உடல் நலத்தையும் காக்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- இன்று (மார்ச் 21) உலக வன நாள்.