/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொலைந்த வாழ்விடம்... இழந்த வாழ்வாதாரம்!
/
தொலைந்த வாழ்விடம்... இழந்த வாழ்வாதாரம்!
ADDED : மார் 20, 2024 12:21 AM

வீடுகளின் கூரைகளிலும், வாசல்களிலும் அழையா விருந்தாளிகளாய் வரும், சிட்டுக் குருவிகளின் 'கீச், கீச்' சிணுங்கல், பல்லுயிர் பெருக்கத்தின் ஆகப் பெரும் அடையாளமாக இருந்தது.
விவசாய நிலங்களில் உள்ள புழு, பூச்சிகள், கொடி தாவரங்களில் இயற்கையாகவே உருவாகும் புழுக்களை தங்களுக்கு உணவாக்கி, தன் குஞ்சுகளுக்கும் எடுத்துச் சென்று கொடுக்கும் சிட்டுக்குருவிகள், இயற்கை சூழலுக்கு நண்பனாக விளங்குகின்றன.
'சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டும்' என்ற நோக்கில் தான், ஐ.நா., சபை ஆண்டு தோறும், மார்ச், 20ம் தேதியை, 'உலக சிட்டுக்குருவி தினம்' என, அறிவித்துள்ளது. இந்தாண்டின் கருப்பொருள், 'நான் சிட்டுக்குருவியை நேசிக்கிறேன்' என்பது தான்.
'இப்பெல்லாம் சிட்டுக்குருவிகளை பார்க்க முடியறதே இல்ல...' இப்படி பலரும் புலம்ப கேட்டிருக்கலாம்.' சிட்டுக்குருவிகள் இல்லாமல் இல்லை; ஆனால், எண்ணிக்கையில் குறைந்து வருகிறது' என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.
உணவுக்கு பஞ்சம்
சுற்றுச்சூழல் எழுத்தாளர், கோவை சதாசிவம்:
முந்தைய காலங்களில், வீடுகளில் உரல் இருக்கும்; நெல், கோதுமை, தினை, சோளம், ராகி, கம்பு போன்ற சிறு தானியங்களை உரலில் குத்தி, சிறு தானியத்தை முறத்தின் வாயிலாக புடைப்பர்; அவ்வாறு, புடைக்கும் போது வெளியேறும் சிறு தானியங்களின் கழிவை தான், சிட்டுக் குருவிகள் உண்டன.
ஆனால் தற்போது, சுத்தம் செய்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அரிசி, சிறு தானியங்களை வாங்கி பயன்படுத்த துவங்கி விட்டனர். அதே போன்று புடலை, பீர்க்கை, பாகை, பூசணி, சுரைக்காய், பீன்ஸ் என வீடுகள் தோறும் கொடி தாவரங்கள் இருக்கும். அவற்றில் ஒரு வகையான பச்சை நிற புழுக்கள் இருக்கும்; நீர்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த அவ்வகை புழுக்களை, சிட்டுக்குருவிகள் தன் குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்கும்; ஆனால், இன்று, கொடி தாவரங்கள் இல்லை. இதனால், சிட்டுக்குருவிகள் தங்களின் உணவுக்கான ஆதாரத்தை இழந்துள்ளன.
வாழ்விடம் 'சுருங்கியது!'
திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன்:
மரத்தில், சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதே இல்லை; கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், வீடுகளின் 'வென்டிலேட்டர்', கிணற்று கற்களின் இடுக்குகளில் உள்ள சந்துகளில் தான் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்வது, சிட்டுக்குருவிகளின் வாழ்விட சூழல்.
ஆனால், கூரை, ஓட்டு வீடுகள் எல்லாம் இன்று, கான்கிரீட் வீடுகளாகிவிட்டன; வீடுகளின் அறையில் ஏ.சி., பொருத்தும் பழக்கம் வந்து விட்டதால், 'வென்டிலேட்டர்' கூட இல்லை. நகர்ப்புறங்களில், கிணறுகளே இல்லாமல் போய்விட்டன. சுருங்கச் சொல்லப் போனால், நகரமயமாதலால், சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடம் இல்லாமல் போய் விட்டது.
அதனால் தான், சிட்டுக்குருவிகளை பார்ப்பது அரிதாகி விட்டது. எனவே, வீடுகளில் அட்டை பெட்டி வைத்து, அதில் அரிசி, சிறுதானியம் வைத்து, ஒரு குடுவையில் தண்ணீர் வைத்தால், சிட்டுக் குருவிகள் அவற்றை தங்களின் வாழ்விடமாக்கிக் கொள்ளும்.
(இன்று, உலகசிட்டுக்குருவிகள் தினம்)

