/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் 'மேஜிக்' நடக்கும்! அமெரிக்க கண்காட்சியால் தொழில் மேம்பாடு அடையும்
/
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் 'மேஜிக்' நடக்கும்! அமெரிக்க கண்காட்சியால் தொழில் மேம்பாடு அடையும்
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் 'மேஜிக்' நடக்கும்! அமெரிக்க கண்காட்சியால் தொழில் மேம்பாடு அடையும்
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் 'மேஜிக்' நடக்கும்! அமெரிக்க கண்காட்சியால் தொழில் மேம்பாடு அடையும்
ADDED : மே 04, 2025 12:31 AM
திருப்பூர்: அமெரிக்காவில் நடக்க உள்ள 'மேஜிக்' சர்வதேச ஜவுளி கண்காட்சி, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்திலும் திடீர் வளர்ச்சியை உருவாக்குமென, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகத்தில், அமெரிக்காவில் நடக்கும், 'மேஜிக்' சர்வதேச கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. லாஸ் வேகாஸ் நகரில் உள்ள வர்த்தக கண்காட்சி மையத்தில், வரும் ஆக., 18 ம் தேதி துவங்கும் 'மேஜிக்' கண்காட்சி, மூன்று நாட்கள் நடக்கிறது.
அமெரிக்கா, உலக நாடுகளில் இருந்து, ஏழு லட்சத்து, 11 ஆயிரத்து, 530 கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்துள்ளது. அவற்றில், பின்னலாடைகள், நான்கு லட்சத்து, 02 ஆயிரத்து, 720 கோடி; இதர ஆடைகள், மூன்று லட்சத்து, 08 ஆயிரத்து, 810 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மட்டும், கடந்தாண்டில், 41 ஆயிரத்து, 930 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது; அந்நாட்டின் ஆயத்த ஆடை இறக்குமதியில், நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவின் பங்களிப்பு, 5.9 சதவீதம்.
கடந்தாண்டு நிலவரப்படி, சீனாவின் ஏற்றுமதி - 27.5 சதவீதம், வியட்நாம் - 18.3 சதவீதம், வங்கதேசம் - 8.8 சதவீதமாக இருந்தது. கடந்த, 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சீனாவின் ஏற்றுமதி, 5 சதவீதமும், வியட்நாம் ஏற்றுமதி, 0.2 சதவீதமும், குறைந்துள்ளது.
அமெரிக்காவின் அதிரடியான வரிவிதிப்பால், சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்கிறது; மற்ற நாடுகள் வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளன. இந்தசூழலில், அமெரிக்காவில் நடக்கும் 'மேஜிக்' கண்காட்சி, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'மேஜிக்' கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் வர்த்தக வாய்ப்புகளை பெற்று வந்தனர். இந்தாண்டு நடக்கும் சூழல், நமது நாட்டுக்கு சாதகமாக மாறியுள்ளது. பெரும்பாலான நாடுகளுக்கான வரி கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சீனா, வங்கதேசத்துக்கும் வரி அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஆடைகளை இறக்குமதி செய்தால், வரியுடன் சேர்த்து, ஆடை விலை மிக அதிகமாக இருக்கும். இந்தியாவுக்கு மட்டுமே வரி விதிப்பு குறைவு; ஆடை விலையும் ஏற்புடையதாக இருக்கும்.
திடீரென ஆடை விலையை அபரிமிதமாக உயர்த்தினால், அமெரிக்க மக்களிடையே வரவேற்பு குறைந்துவிடும். எனவே, திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகளுக்கு, அமெரிக்காவில் இனிவரும் சில ஆண்டுகளுக்குவரவேற்பு கிடைக்கும்.
வளர்ச்சி நிச்சயம் கிடைக்கும்
அமெரிக்காவில், வரும், ஆக., 18ல் 'மேஜிக்' கண்காட்சி துவங்குகிறது. அமெரிக்க வரி உயர்வால், இந்தியா அதிகம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது; வங்கதேசத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது; அந்நாடுகளுக்கான வர்த்தகம் இந்தியாவுக்கு மாறும் வாய்ப்பு உள்ளது. சாதகமான இந்தசூழலில் நடக்கும் 'மேஜிக்' கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூடுதலான ஆர்டர்களை அள்ளியெடுக்க முடியும்.
சீனா, வங்கதேசம், வியட்நாம் நாடுகளுக்கு சென்று கொண்டிருந்த ஆர்டர்கள், தலா1 சதவீதம் நமக்கு திரும்பினாலே, நமக்கு 20 சதவீத வளர்ச்சி கிடைக்கும். இத்தகைய சாதகமான சூழலில் நடக்கும் 'மேஜிக்' கண்காட்சி, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியிலும் 'மேஜிக்' செய்தது போல், திடீர் வளர்ச்சி நிச்சயம் கிடைக்கும்.
- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்