/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மேஜிக்' சர்வதேச கண்காட்சி; 25ம் தேதி வரை அவகாசம்
/
'மேஜிக்' சர்வதேச கண்காட்சி; 25ம் தேதி வரை அவகாசம்
ADDED : ஜூலை 21, 2025 11:49 PM
திருப்பூர்; அமெரிக்காவில் நடக்க உள்ள, 'மேஜிக்' கண்காட்சியில் பங்கேற்க, முன்பதிவு செய்வதற்கான அவகாசம், 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில், அமெரிக்காவில் நடக்கும் மேஜிக் சர்வதேச ஜவுளி கண்காட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அனைத்து நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், வர்த்தக முகமைகள் பங்கேற்கும் கண்காட்சியில், புதிய வர்த்தக வாய்ப்புகள் பகிரப்படுகிறது.
ஆண்டுதோறும், அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், 'மேஜிக்' சர்வதேச ஜவுளி கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, அடுத்த மாதம் ஆக., 18ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு கண்காட்சி நடக்க உள்ளது.
கண்காட்சியில் பங்கேற்க, திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவுடன் சாதகமான முறையில், வர்த்தக ஒப்பந்தம் உருவாகும்; மற்ற நாடுகளை காட்டிலும், இந்திய பொருட்களுக்கான வரிவிதிப்பும் குறைவாக இருக்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருக்கிறது; ஒப்பந்தம் உருவான பிறகு, வர்த்தக பேச்சுவார்த்தையை துவக்கலாம் என, ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கின்றனர். அதன்படி, 'மேஜிக்' கண்காட்சியில், அரசு மானிய உதவியுடன் பங்கேற்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'அமெரிக்காவில் நடக்கும், 'மேஜிக்' கண்காட்சியில் பங்கேற்பது, புதிய திருப்புமுனையாக இருக்கும். ஏற்றுமதியாளர்கள் முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும், 25ம் தேதி வரை அமெரிக்க கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு, 99441 81001, 94430 16219 என்ற எண்களில் அணுகலாம்,' என்றனர்.