/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவாலயங்களில் இன்று மகா சிவராத்திரி விழா; மும்மூர்த்திகளுக்கு மூலாலய கோபுரமாகும் திருச்சப்பரம்
/
சிவாலயங்களில் இன்று மகா சிவராத்திரி விழா; மும்மூர்த்திகளுக்கு மூலாலய கோபுரமாகும் திருச்சப்பரம்
சிவாலயங்களில் இன்று மகா சிவராத்திரி விழா; மும்மூர்த்திகளுக்கு மூலாலய கோபுரமாகும் திருச்சப்பரம்
சிவாலயங்களில் இன்று மகா சிவராத்திரி விழா; மும்மூர்த்திகளுக்கு மூலாலய கோபுரமாகும் திருச்சப்பரம்
ADDED : மார் 08, 2024 12:21 PM
உடுமலை:உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், இன்று மகா சிவராத்திரி விழா நடக்கிறது. பாரம்பரிய முறைப்படி, மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமாக திருச்சப்பரம் நிறுவும் நிகழ்ச்சி நடக்கிறது.
உடுமலை, திருமூர்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் பஞ்சலிங்கம், அருவி, மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் என ஆன்மிக சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.
இக்கோவிலில், சிறப்பு அம்சமாக சிவராத்திரியன்று, மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமாக, கிராம மக்கள், மலைவாழ் மக்கள் கொண்டு வரும் திருச்சப்பரம் நிறுவப்படுவது பல நுாறு ஆண்டுகளாக பாரம்பரியமாக உள்ளது.
நடப்பு ஆண்டு, மகா சிவராத்திரி விழா இன்று நடக்கிறது. இதற்காக, பூலாங்கிணர் கிராமத்தில், சிறப்பு வாய்ந்த மரத்தினால் மும்மூர்த்திகளுக்கும் உரிய கோபுர கலசங்களுடன், அழகிய வேலைப்பாடுகளுடன் திருச்சப்பரம் தயாராகியுள்ளது.
இதற்கு, பூலாங்கிணர் கிராம மக்கள் தானியங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்து, நேற்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து வழியோர கிராமங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, இன்று மாலை, 4:00 மணிக்கு, திருச்சப்பரம் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மலைவாழ் மக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்து, மும்மூர்த்திகளில் மூலாலய கோபுரமாக திருச்சப்பரம் நிறுவும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, முதற்கால யாக பூஜையும், 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, நாளை (9ம் தேதி) அதிகாலை, 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனை நடக்கிறது. மகா சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தென்காசிநாதர் ஆலயம்
அமராவதி ஆறு உருவாகும் மறையூர், கோவில் கடவு பாம்பாற்றின் கரையில் அமைந்துள்ள தென்காசிநாதர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இன்று காலை, திருப்பள்ளி எழுச்சி, வெடி வழிபாடு, காலை, 10:00 மணிக்கு, திருவாபரண ஊர்வலம், மாலை, 6:00 மணிக்கு, செண்டை மேளம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன், பூக்காவடி, தாலம் ஏந்தி சிறுமிகள், பெண்கள் பங்கேற்கும் தாலப்பொலி ஊர்வலம் நடக்கிறது.
மாலை, 6:10க்கு, சகஸ்ர அர்ச்சனை, மகா தீபாராதனை, சந்தியா கால பூஜை, பஜனை, வாணவேடிக்கை என இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை, காலை முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அர்ச்சுனேஸ்வரர் கோவில்
அமராவதி ஆற்றின் கரையில், 950 ஆண்டுகள் பழமையானதும், கொங்குமண்டலத்தில் மிக உயர்ந்த சுயம்பு சிவலிங்கத்திருமேனி உடையதுமான, கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில், இன்று மாலை, 6:00 மணிக்கு, முதல் யாம பூஜையுடன், மகா சிவராத்திரி விழா துவங்குகிறது.2வது யாம பூஜை, 8:00 மணிக்கும், 3வது யாம பூஜை, 12:00 மணிக்கும், நாளை அதிகாலை, 3:00 மணிக்கும் நடக்கிறது. பல்வேறு திரவியங்கள், மலர்கள், ஆடைகளில் அலங்காரம் என சிவராத்திரி பெருவிழா விழா நடக்கிறது.
ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலை தில்லை நகர், ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்னவரர் கோவில், மகா சிவராத்திரி விழா, 7:30க்கு, முதல் கால யாம பூஜையுடன் துவங்குகிறது. நான்கு கால யாம பூஜைகள், பிறந்த நட்சத்திரத்திற்குரிய திரவியங்களால் அபிேஷகம் நடக்கிறது.
இதே போல், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர், பெதப்பம்பட்டி அமரபுயங்கீஸ்வரர், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா இன்று நடக்கிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, வடுகபாளையம் வில்வநாத யோகேஸ்வரர் கோவிலில், இன்று சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இரவு, 7:00 மணி முதல் நாளை காலை, 7:00 மணி வரை, சிவராத்திரி பூஜைகள் நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு, முதல்கால பூஜை, இரவு, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 1:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, நாளை காலை, 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை தீப ஆராதனையுடன் நிறைவடைகிறது.
பக்தர்கள் அனைவரும் சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு வில்வநாத யோகேஸ்வரை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு முழுவதும் அன்னதானம் நடைபெறும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

