/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகாளய அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம்
/
மகாளய அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம்
ADDED : செப் 22, 2025 12:18 AM

திருப்பூர்; மகாளய பட்ச அமாவாசையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன; முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கினர்.
கடந்த பவுர்ணமி நாளில் துவங்கி, 15 நாட்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும், மகாளயபட்ச விரத வழிபாடு நடந்து வந்தது. அமாவாசையான நேற்று, திருப்பூர் பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதிகாலை முதல், பக்தர்கள் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தனர். மகாளயபட்சத்தில், அன்னதானம் வழங்க வேண்டுமென நேர்ந்திருந்த பக்தர்கள் சார்பில், கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் நவராத்திரி விழா துவங்க இருப்பதால், கோவில்களில் கொலு வழிபாடு நடத்துபவர்கள், நேற்றே கொலு மண்டபத்தை தயார் செய்திருந்தனர். மகாளயபட்ச அமாவாசை தினமான நேற்று அதிகாலை முதல், திருப்பூர் பகுதியில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வணங்கினர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தர்ப்பண மண்டபம், குருகிருபாசேவா டிரஸ்ட் சார்பில், அவிநாசி சுப்பையா சுவாமி திருமடம், திருப்பூர், பார்க்ரோடு ராகவேந்திரா கோவில், தாராபுரம் ரோடு - கே.எஸ்.சி., பள்ளி ரோடு சந்திப்பில் உள்ள விநாயகர் கோவில் உட்பட, பல்வேறு இடங்களில், நேற்று தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
குடும்பத்தை சேர்ந்த, மறைந்த முன்னோர்களுக்காக, ஆண்கள் தர்ப்பணம் செய்து வணங்கினர். தர்ப்பை புல், எள், தண்ணீரை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர்; சிவாச்சாரியாருக்கு, பச்சரிசி, காய்கறிகள், வேட்டி - துண்டு, குடை போன்றவற்றை தானமாக வழங்கி, ஆசி பெற்றனர்.