/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உலகையே புத்தகமாக்கி படிக்க கற்றுக் கொள்ளுங்கள்'
/
'உலகையே புத்தகமாக்கி படிக்க கற்றுக் கொள்ளுங்கள்'
ADDED : பிப் 25, 2024 11:30 PM

திருப்பூர்:'புத்தகத்துக்குள் உலகத்தை தேடக்கூடாது. உலகத்தையே புத்தகமாக்கி படிக்க வேண்டும்,' என, ஓய்வு பெற்ற ஐ.ஜி., பாரி கல்லுாரி மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
திருப்பூர், காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி ஆண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. கல்லுாரி செயலாளர் பவுலின்மேரி தலைமை வகித்தார்.
நல்லுார் சர்ச் பாதிரியார் செபஸ்டியன் மரிய சுந்தரம் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.
பாரதியார் பல்கலை அளவில், தங்க பதக்கம் பெற்ற ஐந்து மாணவியர் உட்பட, 24 மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற ஐ.ஜி., பாரி பேசியதாவது: பெண் இல்லாமல் வாழ்க்கையே இல்லை; உலகமும் இல்லை. அனைத்து நிலைகளிலும் பெண்கள் முன்னேறி கொண்டே வருகின்றனர்.
மாணவியர் நீங்களும் முன்னேற நிறைய முயற்சி செய்யுங்கள். நாமும் பத்தோடு பதினோன்றாக கடந்து விடலாம் என எண்ணாதீர்கள். எழுந்து நின்று வரலாற்றில் உங்களை பதிவு செய்திட இன்றே திட்டமிடுங்கள்.
புத்தகத்தை தாண்டியும் வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டியை நிறைய உள்ளது. வாழ்க்கை கல்வியை கற்க சுயஒழுக்கம் மிக முக்கியம். அதில் தடம் மாறக்கூடாது. ஓய்வு நேரங்களில் இனி, இசையை கேட்டு மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
புத்தகத்துக்குள் உலகத்தை தேடக்கூடாது. உலகத்தை புத்தகமாக்கி படிக்க வேண்டும். இன்று எத்தனையோ எத்தனை தகவல்களை தெரிந்து கொள்ள மொபைல் போன், இணையதளமும் உதவுகிறது.
நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்; தினமும் கற்றுக்கொள்ளுங்கள். நன்றாக முழுமனதுடன் படியுங்கள். வெற்றியும் பெறுங்கள், வாழ்த்துக்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பேராசிரியை பிரியதர்ஷினி நன்றி கூறினார். மாணவியரின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

