/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சியின் பிடியிலிருந்து மீண்ட மாணிக்காபுரம் குளம்; ஸ்ரீபுரம் அறக்கட்டளை அமைப்பினர் மகிழ்ச்சி
/
வறட்சியின் பிடியிலிருந்து மீண்ட மாணிக்காபுரம் குளம்; ஸ்ரீபுரம் அறக்கட்டளை அமைப்பினர் மகிழ்ச்சி
வறட்சியின் பிடியிலிருந்து மீண்ட மாணிக்காபுரம் குளம்; ஸ்ரீபுரம் அறக்கட்டளை அமைப்பினர் மகிழ்ச்சி
வறட்சியின் பிடியிலிருந்து மீண்ட மாணிக்காபுரம் குளம்; ஸ்ரீபுரம் அறக்கட்டளை அமைப்பினர் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 02, 2025 11:51 PM

திருப்பூர்; திருப்பூர், முதலிபாளையம் ஊராட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில் மாணிக்காபுரம் குளம் உள்ளது. குளம் நிரம்பியதும், 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சின்னக்குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
முதலிபாளையம்,கெங்கநாயக்கன்பாளையம், மானுார், பொன்னாபுரம் உள்பட பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும்,விவசாய நிலங்களின் பாசனத்துக்கும் கை கொடுத்து வருகிறது.
நொய்யலாற்றின் குறுக்கே, காசிபாளையம் தடுப்பணையிலிருந்து, 10 கி.மீ, துாரம் அமைந்துள்ள ராஜவாய்க்கால் வாயிலாக, மாணிக்காபுரம் குளத்துக்கு தண்ணீர் சென்று வந்தது. நீர் வழித்தடங்கள் பராமரிப்பு இல்லாததாலும், தடுப்பணை உடைந்ததாலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணிக்காபுரம் குளத்தை தண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை.
விவசாயிகள், பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, 2016 ல், மாணிக்காபுரம் குளத்தை துார்வாரும் பணியை ஸ்ரீபுரம் அறக்கட்டளை துவக்கியது. காசிபாளையத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.
தடுப்பணை முதல் குளம் வரையிலான 10 கி.மீ., துாரத்துக்கு, ராஜவாய்க்கால் அளவீடு செய்யப்பட்டது. தடுப்பணையிலிருந்து குளத்துக்கு தண்ணீர் வரும் ராஜவாய்க்கால் புதுப்பித்தல், மாணிக்காபுரம் குளத்தை துார்வாரி, கரைகளை பலப்படுத்துதல், நீர் வழித்தடத்தை சீரமைக்கும் பணிகளையெல்லாம் ஸ்ரீபுரம் அறக்கட்டளையினர் மேற்கொண்டனர்.
இதனால், 40 ஆண்டுகளுக்குப் பின், முதன்முறையாக கடந்த 2019ல், நொய்யலாற்று நீர் ஓடிவந்து, மாணிக்காபுரம் குளத்தை நிரப்பியது. அப்போது முதல், ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் குளம் நிரம்பி வருகிறது.
கடந்த ஜூன் முதல் தமிழகம் முழுவதும் பரவலாக தென் மேற்கு பருவ மழை பெய்துவருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், நொய்யலாற்றில் நீர் வரத்து உயர்ந்தது.
இதனால், நீர் வரத்து அதிகரித்து, ஏழாவது ஆண்டாக, தற்போது, மாணிக்காபுரம் குளம் நிரம்பி கண்களுக்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
ஏராளமான பறவைகள், குளத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது மாணிக்காபுரம் குளத்திலிருந்து உபரி நீர் சின்னக்குளத்துக்கு பாய்கிறது.
உயரும் நிலத்தடிநீர் மட்டம்
கடந்த, 2016ல், மாணிக்காபுரம் குளம் துார்வாரும் பணிகளை மேற்கொண்டோம். ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில், ராஜ வாய்க்கால், குளம் துார்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. காசிபாளையத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, நீர் வழித்தடம் செம்மைப்படுத்தப்பட்டது. இந்த அறப்பணியால், மாணிக்காபுரம் குளம் புத்துயிர் பெற்றது.
வழக்கமாக ஆடி மாதம் நிரம்பும் குளம், நடப்பாண்டு ஆனி மாதத்திலேயே நிரம்பியிருப்பது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், அருகிலுள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வறட்சியின் பிடியில் இருந்த பகுதிகள் தற்போது, செழிப்படைந்துள்ளன. டி.டி.எஸ்., அளவு குறைவாக உள்ளதால், விவசாயிகள் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை, கிணறுகளிலிருந்தே எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
- மெஜஸ்டிக் கந்தசாமி,
ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொருளாாளர்.