/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைகொடுத்த ஆர்டர்கள் உற்பத்தியாளர் நிம்மதி
/
கைகொடுத்த ஆர்டர்கள் உற்பத்தியாளர் நிம்மதி
ADDED : அக் 19, 2024 12:39 AM
திருப்பூரில் உற்பத்தியாகும், பின்னலாடைகளுக்கு, நாடு முழுவதும் ல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல், 'பிராண்டட்' உள்ளாடைகளை பின்னுக்கு தள்ளும் வகையில், திருப்பூரில் தயாராகும், தரமான உள்ளாடைகளை, அனைத்து தரப்பினரும் விரும்பி அணிகின்றனர்.
பாக்கெட் வைத்து தைக்கப்படும் பனியன் டிராயர் மற்றும் 'ட்ரங்ஸ்' ரகங்களை, வடமாநில ஆண்கள் விரும்பி அணிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி ஆர்டர்கள் தான் திருப்பூர் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களுக்கு கைகொடுக்கிறது.
டில்லி, கோல்கட்டா, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா, தெலுங்கானா மாநில சந்தைகளை, திருப்பூர் பின்னலாடைகள் அலங்கரிக்கின்றன. கேரள மார்க்கெட்டிலும், திருப்பூர் ஆடைகள் வியாபித்துள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஆர்டர் கிடைத்து வருவதால் உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
கடந்த இரண்டாவது வாரம், ஆர்டர்கள் உறுதியாகி, திருப்பூரில், அனைத்து வகை உள்ளாடைகள் மற்றும் 'டி-சர்ட்' போன்ற பின்னலாடை உற்பத்தி வேகமெடுத்தது. உற்பத்தி நிறைவு செய்து, இரண்டு நாள் இடைவெளியில், அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.
விரைவாக சென்று சேர வேண்டிய பின்னலாடைகள், சாலை மார்க்கமாக, கன்டெய்னர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
உற்பத்தியில் முன்னேற்றம்
தீபாவளி ஆர்டர், 95 சதவீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் கிடைத்த மிகச்சிறிய ஆர்டர்கள், நாளை காலைக்குள் அனுப்பி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் இருந்து ஆர்டர்கள் கிடைத்தது; வடமாநில ஆர்டர்கள் வழக்கமான அளவு வந்தது. இரவு நேர ஆடை, விளையாட்டு சீருடைகள், 'டி-சர்ட்'கள், குளிர்கால 'ஸ்வெட்டர்' போன்ற ஆடைகள், சிறுவர், இளைஞர்களுக்கான 'ட்ரக் சூட்' போன்ற பேன்ட்கள், அனைத்து வகை உள்ளாடைகளையும் தயாரித்து அனுப்பியுள்ளோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்ததை காட்டிலும், தற்போது திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிலையில் முன்னேற்றம் கிடைத்துள்ளது. தீபாவளியை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டுக்கான ஆர்டர்களும் வந்து கொண்டிருக்கின்றன.
- நிர்வாகிகள், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா).