/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறு நிறுவனங்கள் பயன்படுத்த பல திட்டங்கள்
/
சிறு நிறுவனங்கள் பயன்படுத்த பல திட்டங்கள்
ADDED : ஆக 31, 2025 12:48 AM
நா ட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) முதுகெலும்பாக திகழ்கின்றன.
உள்நாட்டு உற்பத்தியிலும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் முக்கியத்துவம் பெறும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசு ஏராளமான திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்திவருகின்றன.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அரசு திட்டங்களை பெற, 'உத்யம்' பதிவு கட்டாயமாகிறது. குறு நிறுவனங்கள், 6 கோடியே 71 லட்சத்து 43 ஆயிரத்து 144; சிறு நிறுவனங்கள், 4 கோடியே 79 லட்சத்து 844; நடுத்தர நிறுவனங்கள், 35,985 பதிவாகியுள்ளன.
இந்நிறுவனங்கள் மூலம், நாடுமுழுவதும் 29 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 703 பேர் வேலைவாய்ப்பு பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஜூன் 27ம் தேதி, தேசிய குறு, சிறு, நடுத்தரநிறுவனங்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதேபோல், ஆக., 30ம் தேதி சிறு தொழில் தினமாக கொண்டாடப் படுகிறது.
வரையறை என்ன? இயந்திர முதலீடு மற்றும் ஆண்டு வர்த்தக அடிப்படையில், மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வகைப் படுத்துகிறது.
நடப்பாண்டு ஏப்., மாதம் முதல், இந்த வகைப்பாட்டில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. 2.5 கோடி ரூபாய் வரை முதலீடும், 10 கோடி வரை ஆண்டு வர்த்தகம் உள்ளவை, குறு நிறுவனங்கள்; 25 கோடி வரை முதலீடும், 100 கோடி வரை வர்த்தகம் மேற்கொள்பவை சிறு நிறுவனங்கள்; 125 கோடி வரை முதலீடும், 500 கோடி வரை வர்த்தகம் மேற்கொள்பவை நடுத்தர நிறுவனங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
என்னென்ன திட்டங்கள்? குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களால், சுயமாக, அதிக முதலீட்டில் அதி நவீன, புதிய தொழில்நுட்பங்களை நிறுவி, உற்பத்தியை மேம்படுத்துவது இயலாததாகிறது.
மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்க மானியம் வழங்கிவருகிறது. அதிகபட்சம் பத்து கோடி ரூபாய் முதலீட்டில் பொது பயன்பாட்டு மையங்கள் அமைக்கலாம்.
மொத்த திட்ட மதிப்பீட்டில், 70 சதவீதம் மத்திய அரசு; 20 சதவீதம் மாநில அரசு என, பொது பயன்பாட்டு மையம் அமைக்க 90 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. குழும நிறுவனங்கள் வெறும் பத்து சதவீத பங்களிப்பு தொகை செலுத்தினால் போதுமானது.
'கிரெடிட் கியாரன்டி ஸ்கீம்' என்கிற திட்டத்தில், ஆண்டு வர்த்தகம் மற்றும் முந்தைய வர்த்தக நிலைகளை கணக்கிட்டு, புதிய இயந்திரங்கள் வாங்கி விரிவாக்க பணிகள் மேற்கொள்ள, ஐந்து கோடி ரூபாய் வரை, பிணையமில்லாத வங்கி கடன் வழங்கப்படுகிறது.
மண்பாண்டம் உற்பத்தி, தச்சு என பாரம்பரிய தொழில் சார்ந்த குழுமங்களுக்கு, மூலப்பொருட்கள், திறன் மேம்பாடு, புதிய சந்தையை கண்டறிதல், டிசைன் உதவிகளுக்கான மொத்த செலவில், 85 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
செலவினங்களை குறை த்து, உற்பத்தியை பெருக்கும் 'லீன்' நுட்பங்களை செயல்படுத்துவதற்கான செலவினத்தில், 90 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு நிறுவனத்துக்கு அதிகபட்சம், 3.50 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும்.
தமிழக அரசு, புதிதாக துவங்கப்படும் நிறுவனங்களுக்கு, 25 சதவீதம் மூலதன மானியம்; ஐந்து ஆண்டுகளுக்கு, 25 சதவீதம் மின் கட்டண மானியம் வழங்குகிறது.
மத்திய அரசு போலவே, மாநில அரசும், சிறிய அளவிலான கிளஸ்டர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், குழுமமாக, அதிகபட்சம் 10 கோடி மதிப்பிலான பொது பயன்பாட்டு மையங்கள் அமைப்பதற்கு, 7.5 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அரசு துறை சார்ந்த அனைத்து அனுமதி களையும் ஒரே இடத்தில் மிக எளிமையாக பெறும்வகையில், ஒற்றைச்சாளர முறை கைகொடுத்து வருகிறது. கலெக்டர் தலைமையில், மாதம் இரண்டு முறை இதற்கான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்கான கட்டண தொகைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில், 'சமாதான்' தளத்தில் புகார் அளித்து தீர்வு காணமுடியும். திருப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் உள்ளன.