/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாருதி கிரிக்கெட் அணி 'ஆட்டம்' அபாரம்!
/
மாருதி கிரிக்கெட் அணி 'ஆட்டம்' அபாரம்!
ADDED : செப் 20, 2024 10:53 PM
திருப்பூர் : முதல்வர் கோப்பை பொதுப்பிரிவு ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், மாருதி கிரிக்கெட் அகாடமி அணி, ஐந்து ஓவரில் 100 ரன் எடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கடந்த இரு வாரமாக நடந்து வரும், முதல்வர் கோப்பை குழு போட்டிகள் நிறைவு தருவாயை எட்டியுள்ளது. நேற்று, அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில், பொதுப்பிரிவு ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. மொத்தம், 13 அணிகள் பங்கேற்றன. ஐந்து ஓவர் கொண்டதாக போட்டிகள் நடத்தப்பட்டது.
முதல் அரையிறுதி போட்டியில், மாருதி கிரிக்கெட் அகாடமி - ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மாருதி அணி ஸ்பார்ட்டன் அணி பவுலர்களை துவம்சம் செய்தது. ஐந்து ஓவர் (30 பந்து) ஒரு விக்கெட் இழப்பு கூட இல்லாமல், 100 ரன் குவித்து அசத்தியது.
இமாலய இலக்கை விரட்டிய ஸ்பார்ட்டன்ஸ் அணியால், ஐந்து ஓவரில், 30 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது; 70 ரன் வித்தியாசத்தில் மாருதி அகாடமி அணி வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி போட்டிக்கு, திருப்பூர் சச்சின் அகாடமி - உடுமலை பிளாக் கேப்ஸ் அணிகள் மோத உள்ளன.
பொதுப்பிரிவு பெண்கள் கிரிக்கெட்டில், நான்கு அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் முதலில் ஆடிய மாஸ் ராக்கர்ஸ் அணி, நான்கு ஓவரில், 12 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய கேலக்ஸி கிரிக்கெட் அகாடமி அணி, 3.1 ஓவர், 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கல்லுாரி மாணவர் பிரிவில், 24 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், காங்கயம் அரசு கல்லுாரி அணி, ஆறு ஓவரில், 64 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய, திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரி அணி, 5.1 ஓவரில், ஐந்து பந்து மீதமிருக்க, 70 ரன் எடுத்து வெற்றி பெற்றது.