/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கணிதம் இனித்தது: மாணவர்கள் நிம்மதி
/
கணிதம் இனித்தது: மாணவர்கள் நிம்மதி
ADDED : மார் 20, 2024 12:19 AM

திருப்பூர்;பிளஸ் 2 பொதுத்தேர்வில், இதுவரை இல்லாத வகையில், கணிதம் தேர்வு வினாத்தாள் வழக்கத்தை விட, மிகவும் எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இம்மாதம், 1ம் தேதி பிளஸ்2 பொதுதேர்வு துவங்கியது. நேற்று, கணிதம், விலங்கியல், வணிகவியல், பொது செவிலியம் ஆகிய தேர்வுகள் நடந்தது. வழக்கமாக, கணிதம், வணிகவியல் தேர்வு கடினமாக இருக்கும். ஆனால், இம்முறை அனைத்து மாணவர்களும் எளிதாக நல்ல மதிப்பெண் பெரும் வகையில், எளிமையாக கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.
தேர்வு குறித்து மாணவியர் சிலர் கூறியதாவது:
கணித தேர்வு
சந்தியா: வழக்கமாக கணிதம் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதற்கு முன் நடந்த பொது தேர்வுகளில் வினாக்கள் அப்படி பொதுதேர்வில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் எளிதாக வந்தது. அனைத்தும் புத்தகத்தில் இருந்தே இடம் பெற்றது. கணிதம் மிகவும் எளிதாக இருந்த காரணத்தால், நல்ல மதிப்பெண் பெற முடியும்.
சுமிதா: கடந்தாண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வுக்கு முன்னதாக நடந்த தேர்வுகள் என, அனைத்திலும் கணிதம் கடினமாக இருந்தது. புத்தகத்துக்கு வெளியே மற்றும் கடினமான கேள்விகள் கேட்கப்படும் என நினைத்தோம். யாரும் எதிர்பார்க்காத வகையில், மிகவும் எளிதாக இருந்தது. அனைவரும் நல்ல மதிப்பெண் வாங்க முடியும்.
பொல்லிகாளிபாளையம் அரசு பள்ளி முதுகலை கணித ஆசிரியர் ராஜேஸ்வரி கூறுகையில், 'இம்முறை கேள்விகள் மிகவும் எளிதாக இடம்பெற்றிருந்தது. கட்டாய வினாக்களும் எளிதாக இருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள், 'சென்டம்' எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ஒரு மதிப்பெண்ணில், 18 கேள்விகள், புத்தகத்தில் இருந்தே இடம் பெற்று இருந்தது. மீதி இரண்டுக்கும் சரியாக விடைளித்து இருந்தால் நிச்சயமாக 'சென்டம்' எடுத்து விடுவார்கள். யாரும் தோல்வியடைய வாய்ப்பில்லை. இதுவரைக்கு நடந்த பொதுதேர்வுகளை காட்டிலும், இந்தாண்டு கணிதம் ரொம்ப எளிதாக இருந்தது,' என்றார்.
வணிகவியல் தேர்வு
வர்ஷினி: ஒரு மதிப்பெண்ணில் ஆரம்பித்து அனைத் தும் எளிதாக இருந்ததது. குறிப்பாக இதற்கு முந்தைய தேர்வுகளில் திரும்ப திரும்ப கேட்கப்பட்ட வினாக்கள் நிறைய இடம் பெற்று இருந்தது. வணிகவியல் தேர்வு ரொம்ப எளிதாக இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.
சதாஸ்ரீ: கடந்த ஒரு ஆண்டாக நடந்த பல்வேறு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றை இந்த தேர்வில் கேட்கப்பட்டது. எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண்கள் வினாக்கள் என, அனைத்தும் புத்தகத்தில் இருந்து மட்டுமே இடம்பெற்று இருந்தது. வெளியில் இருந்து எந்த கேள்விகளும் இடம்பெறவில்லை.
158 பேர் 'ஆப்சென்ட்'
நேற்று நடந்த தேர்வை, 23 ஆயிரத்து, 20 பேர் எழுதினர். 158 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதில், கணிதம் தேர்வை, 11,503 பேர் எழுதினர். 51 பேர் வரவில்லை. வணிகவியல் தேர்வை, 10,855 பேர் எழுதினர். 93 பேர் வரவில்லை. விலங்கியல் தேர்வை, (400 பேர் எழுதினர்) மூன்று பேர் எழுதவில்லை.
ஊட்டசத்து மற்றும் உணவு பாட பிரிவு தேர்வை (25 பேர்), மூன்று பேரும், ஆடை மற்றும் வடிவமைப்பு (27 பேர்), இருவர், விவசாய அறிவியல் (61 பேர்), ஐந்து பேரும், பொது செவிலியம் (87 பேர்) ஒருவர் எழுதவில்லை. மைக்ரோபையாலஜி (55 பேர்) மற்றும் உணவு சேவை மேலாண்மை (7 பேர்) எழுதினர். மேலும், கணிதம் தேர்வை, 43 பேரும், விலங்கியல் தேர்வை, ஒருவரும், வணிகவியல் தேர்வை, 183 பேர் என, 227 பேர் தனித்தேர்வர்கள் எழுதினர்.

