/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒப்பந்ததாரர்கள் - அதிகாரிகள் மீது மேயர் 'தாட்...பூட்' ; நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
/
ஒப்பந்ததாரர்கள் - அதிகாரிகள் மீது மேயர் 'தாட்...பூட்' ; நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
ஒப்பந்ததாரர்கள் - அதிகாரிகள் மீது மேயர் 'தாட்...பூட்' ; நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
ஒப்பந்ததாரர்கள் - அதிகாரிகள் மீது மேயர் 'தாட்...பூட்' ; நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
ADDED : மார் 04, 2025 06:48 AM

திருப்பூர்; மாநகராட்சி மன்ற கூட்டம், மண்டல கூட்டங்களில் பங்கேற்காத பணி ஒப்பந்த நிறுவனங்கள், மாநகராட்சி அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் விளக்கம் கேட்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று காலை, மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கூட்ட நடந்த விவாதம்:
ரவி (இ.கம்யூ.,)
சொத்து வரி குறைப்பு குறித்து தீர்மானத்தில், குப்பை வரி விதிப்பு குறைப்பது; 6 சதவீத வரி உயர்வு ரத்து ஆகியன குறித்தும் தெரிவிக்க வேண்டும். வரி விதிப்பு மண்டலங்கள் முறையாக பிரிக்க வேண்டும். குமார் நகர் பகுதியில் ஒன்வே நடைமுறை ரத்து செய்ய வேண்டும்.
கோவிந்தசாமி (மண்டல குழு தலைவர்):
நகரில் பல இடங்களிலும் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வாய்க்காலில் பாயும் நீர் போல் ரோட்டில் வீணாகிறது. காங்கயம் ரோட்டில் மேயர் வார்டு உள்ளிட்ட 25 இடங்களுக்கும் மேல் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
அன்பகம் திருப்பதி (மாநகராட்சி எதிக்கட்சி தலைவர்):
ரோடுகளுக்கு 'யுனிக் கோடு' வழங்கும் பணியில் கவுன்சிலர்களுடன் ஆலோசித்து கருத்து கேட்க வேண்டும். பல ரோடுகள் விடுபட்டுள்ளன. வரி விதிப்பில் எவ்வளவு சதவீதம் குறைக்க வேண்டும் என்று தீர்மானத்தில் கொண்டு வர வேண்டும். பிற மாநகராட்சிகளை விட திருப்பூரில் தொழில் மற்றும் வணிக கட்டடங்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கான வரியினங்கள் மிக அதிகம். குறைக்க வேண்டும். ஆறு சதவீத வரி உயர்வு என்பதையும் குறைக்க வேண்டும்.
சாந்தாமணி (ம.தி.மு.க.,):
குழாய் பதிப்பு பணிகள் விரைந்து முடித்து ரோடுகள் சீரமைக்க வேண்டும். மங்கலம் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறையை கையைக் காட்டி விட்டு மாநகராட்சி ஒதுங்கி கொள்கிறது. மழை நாட்களில் ஆலங்காடு, மங்கலம் ரோடு பகுதிகள் பயன்படுத்த முடியாத அளவு மோசமாகி விடுகிறது.
குணசேகரன் (பா.ஜ.,): வரி குறைப்புக்கான தீர்மானம் வரவேற்க கூடியது. இங்கு பிரச்னையாக உள்ள குப்பை வரி, முன் தேதியிட்ட வரி குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும்.
தங்கராஜ் (அ.தி.மு.க.,):
தாய் மூகாம்பிகா நகரில் பல ஆண்டுகளாக மேல்நிலைத் தொட்டி கட்டுமானப் பணி கிடப்பில் உள்ளது. தெரு விளக்கு, 400 அமைக்க ஒப்புதல் அளித்து, 100 கூட பொருத்தவில்லை. ஐஸ்வர்யா நகர் மேல்நிலைத் தொட்டி நிரம்பி வழிந்தால் நிறுத்தப்படுவதில்லை. அருகேயுள்ள பள்ளி மற்றும் வீடுகளுக்குள் நீர் புகுந்து விடுகிறது. வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வரும் வாகனங்கள் ரோட்டில் நிறுத்துவதால் பெரும் அவதி ஏற்படுகிறது.
கண்ணப்பன் (அ.தி.மு.க.,):
காங்கயம் ரோட்டில், 18 இடங்களில் லீக்கேஜ் உள்ளது. செல்லப்பபுரத்தில் குழாய் பழுது பார்ப்பு பணி செய்த போது, போலீசார் தடுத்து, ஆட்களை கைது செய்வதாக மிரட்டுகின்றனர். டேப் இன்ஸ்பெக்டர்கள், வரி வசூலுக்கு சென்று விடுகின்றனர். குடிநீர் பணி பாதிக்கப்படுகிறது. பகுதிவாரியாக குடிநீர் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
திவ்யபாரதி (அ.தி.மு.க.,):
இரு இடங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறு வற்றி விட்டது. புதிய இடத்தில் சாயக்கழிவு கலந்து வருகிறது. வேறு ஆழ்குழாய் அமைக்க வேண்டும், தொழிற்சாலைகளிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. கண்காணிக்க வேண்டும்.
தங்கராஜ் (பா.ஜ.,):
குப்பை அள்ளும் பணியில் மந்த நிலை காணப்படுகிறது. இது குறித்து பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை. நான்காவது குடிநீர் திட்டத்தில் இணைப்பு பணிகள் தாமதமாக நடக்கிறது.
சேகர், அ.தி.மு.க.,:காலேஜ் ரோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் பல வீடுகள் அகற்றியும், இன்னும் நான்கு வீடுகள் அகற்றவில்லை. இரண்டாண்டுக்கு மேலாகியும் அதே நிலை உள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் சவால் விடுகின்றனர். மேலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மாஸ்கோ பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக வழித்தடம் இல்லை. அங்குள்ள தனியார் லே அவுட்டில் ஒரு வீடு மட்டுமே கட்டியுள்ளனர். அங்கு மாநகராட்சி செலவில் மின் கம்பங்கள் பதித்து, 5 புதிய தெரு விளக்குகள் பொருத்தியுள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் தெரு விளக்குகள் வரவில்லை.
திவாகரன் (தி.மு.க.,):
அதிகாரிகள் எந்த பணிக்கும் ஒத்துழைப்பதில்லை. இன்னும் 2 ஆண்டில் தேர்தல் வந்தால், எந்த பணிகளை சொல்லி ஓட்டு கேட்க முடியும். துாய்மைப்பணிக்கு ஆட்கள் மிகமிகக் குறைவு. இதனால், குப்பை அள்ளும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் அலட்சியம்
-------------------
அனுப்பர்பாளையம் பள்ளிக்கு, 2 ஆயிரம் பேர் செல்கின்றனர். ஆனால், ரோடு ரொம்ப மோசமாக உள்ளது. வாகனம் மோதி வடிகால் இடிந்தது; போர்வெல் பறி போனது. புகார் செய்தும் எந்தப் பயனும் இல்லை. எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் அவசரமாக நிதி பெற்று போர்வெல் அமைத்து நான்கு மாதமாகி விட்டது; இன்னும் மின் இணைப்பு பெறவில்லை. ஆறு மாதமாக ஒரு வடிகால் பணி துவங்கவில்லை. பணி ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அலுவலர்கள் எந்த கூட்டத்துக்கும் வருவதில்லை. எந்த புகாரையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை.
- செல்வராஜ்
இ.கம்யூ., கவுன்சிலர்
---------------------------
படவிளக்கம்
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்த அவசர கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள்.