ADDED : ஜன 09, 2025 11:27 PM
உடுமலை, ; தேசிய நெடுஞ்சாலையில், பாதாளச்சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகள் சேதமடைந்து விபத்துகள் ஏற்பட்டும், நெடுஞ்சாலைத்துறை நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து பழநி ரோட்டில் நகர எல்லை வரை, தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அதில், 15க்கும் மேற்பட்ட ஆளிறங்கு குழி மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆளிறிங்கு குழிகள் அமைக்கும் போதே நெடுஞ்சாலையை விட உயரமாக, மேடு கட்டி, அதன் மேல் மூடிகளை அமைத்தனர். இதனால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
பல ஆண்டு தொடர் பயன்பாடு காரணமாக, ஆளிறங்கு குழி மூடிகள் உடைந்து வருகிறது. குறிப்பாக, கழுத்தறுத்தான் பள்ளம் அருகே நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், மூடிகள் உடைந்து, குழி ஏற்பட்டுள்ளது.
இந்த குழிகள் இருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இதே போல், காந்திநகர் பஸ் ஸ்டாப், ஐஸ்வர்யாநகர் ரோடு சந்திப்பு, கொழுமம் ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களிலும், மூடி உடைந்து, விபத்து ஏற்பட்டும், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
விரைவில், நுாதன போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்ட, வாகன ஓட்டுநர்கள் தயாராகி வருகின்றனர்.

