/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனசிலாயோ! 'வேட்டையன்' பராக்... பராக்... பராக்
/
மனசிலாயோ! 'வேட்டையன்' பராக்... பராக்... பராக்
ADDED : அக் 06, 2024 03:31 AM

ரஜினி படங்கள் வெளியாகும்போதெல்லாம், அவரது ரசிகர்கள் பட்டாம்பூச்சிகளாக மாறிவிடுவர். வரும் 10ம் தேதி வெளியாக உள்ள 'வேட்டையன்' படம், ரசிகர்களைப் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கியுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமிதாப், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் என்று பிரபல நட்சத்திரப்பட்டாளங்களின் பங்களிப்பும் உள்ளது.
அனிருத் இசையமைப்பில், ஏற்கனவே பாடல்கள் மெகா ஹிட் ஆகியுள்ளன. திடீரென உடல்நலக்கோளாறு ரசிகர்களை விசனப்பட வைக்க, அதில் இருந்து ரஜினி விரைவில் மீண்டுவந்துள்ளார். 'வேட்டையன்' படத்தை கொண்டாட்டத்துடன் காணத் தயாராகிவிட்டனர் ரசிகர்கள்!
திரையில் தோன்றுவதை
பார்க்க ஆர்வப்பெருக்கு
மேகநாதன், மாவட்ட தலைவர், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்:நாங்கள், 1979ல் இருந்து ரஜினி ரசிகராக இருந்து வருகிறோம். ரசிகர் மன்றம் சார்பில் நிறைய நலத்திட்டம் வழங்கியிருக்கிறோம்; நிறைய இடங்களில் பஸ் ஸ்டாப் கட்டியுள்ளோம். அவர் கட்சி துவங்குவார் என எதிர்பார்த்தோம்; அவர் கட்சி துவங்காத நிலையில் மீண்டும் மன்றத்துக்கே திரும்பிவிட்டோம்; புதிதாக ரசிகர்கள் வந்த வண்ணம் தான் உள்ளனர்.ரஜினி உண்மையாக இருக்கிறார்; நாங்களும் அவருக்கு உண்மையாக இருக்கிறோம். அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும் என பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடத்தவுள்ளோம். 'திரையில் ரஜினி வருகிறார்' என்பதே ஒரு எதிர்பார்ப்பு தான். அந்த வகையில், வேட்டையனை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ஸ்டைல், எளிமை...
ரசிகராக மாறினோம்
அண்ணாமலை (எ) குமாரசாமி, அவிநாசி நகர துணைச்செயலாளர், ரஜினி ரசிகர் மன்றம்: கடந்த, 35 ஆண்டுகளாக ரஜினி ரசிகராக இருந்து வருகிறேன். அவரது ஸ்டைல், எளிமை, நேர்மை ஆகியவையும், யாரையும் ஏமாற்றாமல், உழைத்து பிழைக்க வேண்டும் என்ற அவரது அறிவுரையும், என்னை அவரது ரசிகராக மாற்றியது. அவரது, 65வது பிறந்தநாளின் போது, அவர் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என, அலகு குத்தி, இறைவனிடம் வேண்டினேன். 'ஜெயிலர்' சினிமா வெற்றி வேண்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், அங்கபிரதட்சணம் செய்தேன். 'வேட்டையன்' படம் வெற்றி பெற, 3 நாள் மாலை அணிந்து, இறைவனை பிரார்த்திக்க உள்ளேன். அவரது பிறந்த நாளின் போது, இயன்றளவு உதவி செய்து வருகிறோம்.