/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணம் 'கறக்கும்' இடைத்தரகர்கள் அவிநாசி தாலுகா ஆபீசில் அவலம்
/
பணம் 'கறக்கும்' இடைத்தரகர்கள் அவிநாசி தாலுகா ஆபீசில் அவலம்
பணம் 'கறக்கும்' இடைத்தரகர்கள் அவிநாசி தாலுகா ஆபீசில் அவலம்
பணம் 'கறக்கும்' இடைத்தரகர்கள் அவிநாசி தாலுகா ஆபீசில் அவலம்
ADDED : மார் 15, 2024 12:32 AM

அவிநாசி;அவிநாசி தாலுகா அலுவலகத்துக்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக தினந்தோறும், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்களிடம் தாலுகா அலுவலகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இடைத்தரகர்கள் சுற்றி வளைத்து பணத்தை கறந்து விடுகின்றனர்.
இன்னும் ஒரு சிலர் உதவி செய்வது போல் விண்ணப்பம் எழுதிக் கொடுப்பது, அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் என கூறிக்கொண்டு, வேண்டிய வேலைகளை முடித்துக் கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தாலுகா அலுவலகத்தில் தமிழக அரசின் இ -சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி முறையில் அனைத்து விண்ணப்பங்களும் பதிவு செய்து தருவது, ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் சேர்ப்பது, முகவரி மாற்றம் செய்வது, போட்டோ புதுப்பிப்பது போன்றவைகளுக்காக 50 முதல் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை கட்டணமாக அரசுக்கு செலுத்தப்படுகின்றது.
ஆனால், பொதுமக்களிடம் இ-சேவை மையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், தாமதமாகும் அல்லது சர்வர் கோளாறு என வெவ்வேறு காரணங்கள் இடைத்தரகர்களால் கூறப்படுகிறது. வெளியில் எடுத்து கொள்ளலாம் என்று கூறும் இடைத்தரகர்கள், 250 - 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
தாலுகா அலுவலகத்தில், அனைத்து பணிகள் சார்ந்த விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் எதுவும் தாலுகா அலுவலகத்தில் கிடைப்பதில்லை. மாறாக வெளியில் உள்ள தனியார் ஜெராக்ஸ் கடைகளிலும், இடைத்தரகர்களிடமும் 50 - 100 ரூபாய் வரை ஒவ்வொரு விண்ணப்பங்களும் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடி நடவடிக்கை
இது குறித்து, தாசில்தார் மோகனனிடம் கேட்டபோது, ''தாலுகா அலுவலகத்தில், பொதுமக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் இ-சேவை மையத்தை பயன்படுத்தி பயன் பெறவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படும்'' என்றார்.

