தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வலசை வரும் சிறகுகள்; வழி திறக்கிறது ‘நஞ்சராயன்’

வலசை வரும் சிறகுகள்; வழி திறக்கிறது ‘நஞ்சராயன்’

வலசை வரும் சிறகுகள்; வழி திறக்கிறது ‘நஞ்சராயன்’


UPDATED : அக் 17, 2026 05:38 PM

ADDED : அக் 17, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 05:38 PM ADDED : அக் 17, 2026 05:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு குளத்தின் அழகு அதன் நீர்ப்பரப்பில் மட்டுமல்ல; அதில் நீந்தும் பறவைகளிலும், நீருக்குள் துடிக்கும் உயிர்களிலும் இருக்கிறது. ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் உயிர்ப்பிழந்து கிடந்த நஞ்சராயன் குளத்தில், இப்போது மீண்டும் பறவைகளின் சிறகசைப்பும் நீர்வாழ் உயிர்களின் நடமாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இயற்கையின் மூச்சை அடைத்த களைகளை அகற்றி, பல்லுயிர்களின் புகலிடமாக இந்தச் சரணாலயத்தை மீட்டெடுக்கும் பணி வேகமெடுத்துள்ளது.

நானுாறு ஏக்கர் பரப்பில், நல்லாற்றின் கழிமுகமாக விரிந்து கிடக்கும் நஞ்சராயன் குளம், பல்லாயிரம் பறவைகளின் வலசை வீடு. தமிழகத்தின் பதினேழாவது பறவைகள் சரணாலயமாக 2022-ல் அறிவிக்கப்பட்ட இந்த குளம், ஆகாயத்தாமரையால் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தது.

ஆகாயத்தாமரையை அகற்றுவதோடு, அடுத்த பத்து ஆண்டுகள் பராமரிக்கும் பொறுப்பையும் ‘வெற்றி’ அறக்கட்டளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஜூலையில் தொடங்கிய பணி, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 200 ஏக்கரில் நடக்கிறது. இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்து, 32 லட்சம் அளவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. கொமாட்சு நிறுவனத்தின் பிரத்யேக வாகனங்கள் மூலம் அகற்றப்படும் தாமரை மீண்டும் வராமல் இருக்க இரும்பு, மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படும்.

இதன் மூலம் நாட்டின் மிகச்சிறந்த சரணாலயமாக நஞ்சராயன் மாறும் என அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். நேற்று கலெக்டர் மனிஷ் நாரணவரே, ஆனைமலை புலிகள் காப்பக வன பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் ஆகியோர் குளத்தை பார்வையிட்டு, அறக்கட்டளை நிர்வாகிகளிடம் விவரங்களை கேட்டறிந்து, மேம்பாடு குறித்து ஆலோசித்தனர். வனச்சரகர் நித்யா, இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பார்வையாளர் அரங்குகள், பயிற்சி மையம், பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என ‘வெற்றி’ அறக்கட்டளை கோரிக்கை விடுத்தது. அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

கருத்துரு தயாராகிறது

கலெக்டர் மனிஷ் நாரணவரே:

சூழலியல் பாதுகாப்பை அனைவரும் அறிய வேண்டும். உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. யார் வாழ வேண்டும், யார் அழிய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் மனிதகுலம் மட்டுமே உள்ளது. எனவே இயற்கையையும் பிற உயிர்களையும் பேணுவது மனிதர்களின் முக்கிய கடமை. நஞ்சராயன் குளத்தை முன்மாதிரி சரணாலயமாக உருவாக்க கருத்துரு தயாரித்து அரசிடம் சமர்ப்பித்து, அனுமதி, நிதி பெற்று மேம்படுத்துவோம்.

நாடு முழுதும் பாராட்டு

வன பாதுகாவலர் வெங்கடேஷ்:

வெற்றி அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் பணிகள் வியக்க வைக்கின்றன. வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நாடு முழுவதும் பாராட்டை பெற்றுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்க தன்னார்வ அமைப்புகளின் முயற்சிகள் நாட்டுக்கு மிக முக்கியமானவை.

தொடர் கண்காணிப்பு

நடராஜ் முத்துசாமி, முதன்மை செயல் அலுவலர், வெற்றி அறக்கட்டளை:

ஆகாயத்தாமரை அகற்றிய பிறகு வாத்துகள், பெருவாத்துகள் தடையின்றி நீந்துகின்றன. நீர் காகம் போன்ற மூழ்கி இரை தேடும் பறவைகளுக்கு வாழத் தகுதியான பரப்பு கிடைத்துள்ளது. ஆகாயத்தாமரையின் அதிவேக பரவலால் சூரிய ஒளி, ஆக்சிஜன் கிடைக்காமல் உயிர்கள் மூச்சுத்திணறும். கனரக வாகன பணி முடிந்ததும் மீண்டும் களைகள் வராமல் தொடர்ந்து கண்காணிப்போம்.

நஞ்சராயன் குளம் – பறவைகள் சரணாலயத்தில், ‘வெற்றி’ அறக்கட்டளை சார்பில், ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகளை, கலெக்டர் மனிஷ் நாரணவரே, ஆனைமலை புலிகள் பாதுகாப்பு வன அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அருகில், ‘வெற்றி’ அறக்கட்டளை தலைவர் சிவராம் உள்ளிட்டோர்.

பராமரிப்பு பணி


ஏற்றது ‘வெற்றி’
திருப்பூரில் உள்ள ஒரே பறவைகள் சரணாலயம் நஞ்சராயன் தான். ஆகாயத்தாமரை அகற்றுவதோடு பத்தாண்டுகள் பராமரிக்க தயாராக உள்ளோம்.
– சிவராம், தலைவர், வெற்றி அறக்கட்டளை



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us