தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மினி இந்தியா... மெகா சவால்கள்!

 மினி இந்தியா... மெகா சவால்கள்!

 மினி இந்தியா... மெகா சவால்கள்!


ADDED : ஜூலை 20, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

வரும் 2027-ம் ஆண்டின் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முதல்கட்டமாக, 'வீடு பட்டியல் கணக்கெடுப்பு' வரும் ஆகஸ்ட் 1 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த முறை காகிதப் படிவங்கள் விடைபெற்று, அனைத்தும் மொபைல் செயலி வழியிலான டிஜிட்டல் மயமாக மாறுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்தின் வீதியெங்கும் தலா 200 வீடுகள் வீதம் களமிறங்க 3,800 களப்பணியாளர்கள் (பெரும்பாலும் ஆசிரியர்கள்) தயாராக உள்ளனர்.

குடும்பத் தலைவரின் பெயர், வீட்டின் கட்டமைப்பு, சமையல் எரிபொருள் முதல் வாகனங்கள், இணைய வசதி வரை மொத்தம் 33 எளிய கேள்விகளுக்கான பதில்களை அவர்கள் சேகரிக்க வேண்டும். பல மாநிலங்களைச் சேர்ந்த மனிதர்கள் சங்கமிக்கும் திருப்பூரின் யதார்த்தக் களத்தில், இந்தக் கணக்கெடுப்பு அத்தனை எளிதானதாக இருக்கப் போவதில்லை.

நகரும் மனிதர்கள் 'மினி இந்தியா' போலத் திகழும் திருப்பூரின் முதல் சவாலே இங்கிருக்கும் 'நிலையான முகவரியற்ற உழைப்பாளர்கள்'தான். லட்சக்கணக்கான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வாடகை வீடுகளிலும், ஹாஸ்டல்களிலும், நிறுவன வளாக விடுதிகளிலுமாகத் தங்கியுள்ளனர்.

இவர்களின் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பைச் சார்ந்து ஓடுவதால், இன்று இருக்கும் அறையில் நாளை இருப்பதில்லை. இது கணக்கெடுப்பாளர்களுக்குக் காத்திருக்கும்முதல் சவால்.

பூட்டிய கதவுகள் திருப்பூரின் குடியிருப்புகள் பகல் நேரத்தில் மவுனமாகிக் கிடக்கின்றன. காலை 8:30 மணிக்கே ஆடை நிறுவனங்களுக்குள் நுழையும் தொழிலாளர்கள், இரவு 7:00 மணிக்கு மேல் தான் அறைக்குத் திரும்புகிறார்கள். இதனால், அதிகாரிகள் ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளனர்.

ஆசிரியர்களான களப்பணியாளர்கள், தங்களின் பள்ளி நேரத்திற்குப் பிறகு அந்திப் பொழுதிலும், தொழிலாளர்கள் அறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் மட்டுமே கதவுகளைத் தட்டித் தீவிரமாகக் கணக்கெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பல மொழிகள் ஒரு காம்பவுண்டிற்குள் நுழைந்தால், ஒரே அறையில் பீஹார், ஒடிசா, மேற்குவங்கம், ஜார்கண்ட் எனப் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதைப் பார்க்கலாம்.

தமிழ் அல்லது ஆங்கிலம் அறியாத இவர்களிடம், 33 கேள்விகளை எப்படிக் கொண்டு சேர்ப்பது? ஓரளவுக்குத் தமிழ் தெரிந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அல்லது உடன் தங்கியிருப்பவர்களின் உதவியோடு, மொழியை மொழிபெயர்த்துத் தான் விபரங்களைப் பெற வேண்டிய சூழல் உள்ளது.

மேலும், பகிர்ந்து தங்கும் அறைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் எவ்வளவு அறைகள் உள்ளன, ஒரு அறையில் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகப் பிரித்தறிவதும் சவாலான காரியம்.

ஏன் தயக்கம்? விபரங்களைக் கொடுத்தால் சொந்த ஊரில் உள்ள ரேஷன் கார்டு ரத்தாகிவிடுமோ?, ஏதாவது சட்டப் பிரச்னை வருமோ? என்ற ஒரு மெல்லிய தயக்கம் தொழிலாளர்கள் மத்தியில் இருப்பது யதார்த்தம். அவர்களின் தயக்கத்தைப் போக்கி, கதவைத் திறக்க வைப்பதே கணக்கெடுப்பாளர்களின் முதல் வெற்றியாக இருக்கும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு: தேவை ஒத்துழைப்பு: அதிகாரிகள் தரும் விளக்கம்:

''மக்கள்தொகை கணக்கெடுப்பின் போதுஎந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணமும் கேட்கப்படாது. ஒரு நபர் தற்போது எங்கு வசிக்கிறார் என்ற எளிய விபரம் மட்டுமே சேகரிக்கப்படும். இதற்கும் அரசின் நலத்திட்டங்கள் அல்லது சலுகைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஏற்கனவே கடந்த 17-ம் தேதி முதல் 'se.census.gov.in' இணையதளம் மூலம் ஆன்லைனில் சுய பதிவு செய்யும் வசதியும் தொடங்கியுள்ளது. அப்படிப் பதிவு செய்தவர்களின் விபரங்களும் களத்தில் நேரில் சரிபார்க்கப்படும்.

பகல்--இரவு என மாறும் ஷிப்ட்கள், அதிவேகமாக இயங்கும் தொழிற்சாலைகள், தொடர்ந்து நகரும் மனிதர்கள் என எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் திருப்பூரில், இந்தக் கணக்கெடுப்புப் பணி கூடுதல் பொறுமையையும் கள அனுபவத்தையும் கோருகிறது. 3,800 களப்பணியாளர்களின் நிதானமான உழைப்பும், பொதுமக்களின் யதார்த்தமான ஒத்துழைப்பும் இணைந்தால் மட்டுமே, பின்னலாடை நகரத்தின் உண்மையான நிலவரம் இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பில்முழுமையாகப் பதிவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us