/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீசனில் புதினா சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
/
சீசனில் புதினா சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
ADDED : செப் 10, 2025 09:49 PM

உடுமலை; கிணற்றுப்பாசனத்துக்கு புதினா சாகுபடி செய்ய, உடுமலை வட்டார விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி சாகுபடி அதிகளவு மேற்கொள்கின்றனர். மேலும், முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, புதினா, கொத்தமல்லி தழை உள்ளிட்ட சாகுபடிகளுக்கு, சிறு, குறு விவசாயிகள் விதைப்பு செய்கின்றனர். இந்த சீசனில் பரவலாக புதினா சாகுபடியாகியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: புதினா சாகுபடியில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்; 40 - 60 நாட்களில் பறிக்கும் நிலைக்கு இலைகள் தயாராகி விடும். ஏக்கருக்கு, 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
குறைந்த பரப்பிலேயே புதினா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரியளவில் நோய்த்தாக்குதல் எதுவும் இருப்பதில்லை. முகூர்த்த சீசனை இலக்காக வைத்து நடவு செய்கிறோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.