
டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வகைப் போட்டிகளிலும் சிறப்பாக சுழல் பந்து வீசி, தடம் பதித்தவர், ரவிச்சந்திரன் அஷ்வின். டெஸ்ட்டில் கும்ளேவுக்கு (619 விக்கெட்) அடுத்து அதிக விக்கெட் (106 போட்டி - 537) வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர். ஆல்ரவுண்டராகவும் ஜொலித்தார். அவரது திடீர் ஓய்வு அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர் களைத் திகைப்புக்குள்ளாக்கி உள்ளது.
சிறந்த பவுலர்களை உருவாக்க வேண்டும்
ரவிக்குமார், அவிநாசி: நம் அணி பல வெற்றிகளை பெற காரணமாக இருந்தவர் அஷ்வின். ஓய்வு அறிவிப்பு, ரசிகர்களுக்கு வருத்தம் தருகிறது. சுழற்பந்து வீச்சில் தற்போது அணி தடுமாறுகிறது. பார்டர் - கவாஸ்கர் தொடரின் நிலை அறிந்து, பின் முடிவெடுத்து இருக்கலாம். அஷ்வின் இளைஞர்களுக்கு வழிகாட்டியிருப்பதாக நினைத்துக் கொள்ளலாம். மேலும் சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்க, பந்து வீச்சு பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கலாம். புதிய ஆர்வமுள்ள வீரர்களை உருவாக்கி தந்தால் சிறப்பாக இருக்கும்.
இளம் வீரர்களுக்கு உரிய தருணம்
ராஜேஷ், மில்லர் ஸ்டாப்: டெஸ்ட்டில் அதிக விக்கெட் எடுத்தவர். சிறப்பான பந்துவீச்சாளர்; பேட்டிங், பீல்டிங்கிலும் அசத்தக்கூடியவர். இளம் வீரர்களை உருவாக்குவதில் ஆர்வமாக இருப்பவர். 'ஈகோ' இல்லாமல் சகஜமாக பழகக்கூடியவர். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இந்திய அணியில் பணியாற்றியவர். இலங்கையின் முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ேஷன் வார்னேக்கு நிகரானவர் என்று கூறலாம். இக்கட்டான நேரத்தில் இவரது ஓய்வு, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் சறுக்கலை சற்று ஏற்படுத்தலாம். அதே நேரம், இளம் வீரர்கள் இத்தருணத்தை சிறப்பாக பயன்படுத்தி, அடுத்த நிலைக்கு முன்னேற, அஷ்வின் வழிகாட்டியுள்ளார்.
புதிய சாதனையை படைத்திருக்கலாம்
சுப்புராஜ், குமார் நகர்: ஒரு ஆல்ரவுண்டராக, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஷ்வின். இன்னமும் இரண்டு ஆண்டுகள் விளையாடி இருக்கலாம். டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.
இன்னும், ஓரிரு ஆண்டுகள் விளையாடி இருந்தால், டெஸ்ட் கிரிக்கெட் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்திருக்க முடியும். இக்கட்டான சூழலில் தனது பேட்டிங் மூலம் அணியை மீட்டெடுத்து வெற்றிக்கு அழைத்துச் செல்லக்கூடியவர். கும்ளேவுக்கு பின் அஷ்வின் தான் சுழற்பந்தில் ஜொலித்தார். இவரது வெற்றிடத்தை உடனே நிரப்புவது சற்று கடினம் தான்.
'மிஸ் யூ' அஷ்வின்!