/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணைகளில் இன்று மாதிரி ஒத்திகை பயிற்சி
/
அணைகளில் இன்று மாதிரி ஒத்திகை பயிற்சி
ADDED : மே 14, 2025 11:32 PM
உடுமலை; பருவமழை காலங்களில், ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்வது குறித்த, மாதிரி ஒத்திகை பயிற்சி திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில், அரசுத்துறைகளால் இன்று நடத்தப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தற்போது துவங்கியுள்ளது. மழைக்காலங்களில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை துவக்க அரசு துறைகளுக்கு வலியுறுத்தியள்ளது. இது தொடர்பாக ஒத்திகை பயிற்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இது குறித்து, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது:
பருவமழை காலங்களில், கனமழை காரணமாக, ஆற்றில் ஏற்படும் அதிக வெள்ளப்பெருக்கால் பலத்த சேதமடையும்பட்சத்தில், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி நடக்க உள்ளது.
இன்று, (15ம் தேதி) மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையில், இந்த ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. சென்னை பேரிடர் மேலாண்மைத்துறை வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி நடைபெறும்.
வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளால், இந்த ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி நிகழ்வின் போது, பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. மக்கள் இயல்பான பணிகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.