/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலியஸ்டர் ஆடை நவீன தொழில்நுட்பம் : உற்பத்தியாளரிடம் தேவைப்படும் மாற்றம்
/
பாலியஸ்டர் ஆடை நவீன தொழில்நுட்பம் : உற்பத்தியாளரிடம் தேவைப்படும் மாற்றம்
பாலியஸ்டர் ஆடை நவீன தொழில்நுட்பம் : உற்பத்தியாளரிடம் தேவைப்படும் மாற்றம்
பாலியஸ்டர் ஆடை நவீன தொழில்நுட்பம் : உற்பத்தியாளரிடம் தேவைப்படும் மாற்றம்
ADDED : டிச 14, 2024 11:31 PM

திருப்பூர்: நேர்த்தியான, மிகத்தரமான பாலியஸ்டர் ஆடை தயாரிப்பின் வாயிலாக, வடமாநில சந்தைகளை திருப்பூர் தக்கவைக்க முடியும். இதற்குத் தேவையான மாற்றங்களை உற்பத்தியாளர்கள் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நுாலிழை பின்னலாடைகளுக்கு, நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வந்தது. குறிப்பாக, கோடைக்கால விற்பனையில் திருப்பூர் ஆடைகள் 'நம்பர் 1' இடத்தில் இருந்தன.
பாலியஸ்டர் 'பேப்ரிக்'
வங்கதேசத்தில் இருந்து, ஆடை இறக்குமதி அதிகரிக்க துவங்கியதால், வடமாநில வியாபாரிகள், பாலியஸ்டர் துணியை வாங்கி, ஆடை உற்பத்தியில் கால்பதித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, பாலியஸ்டர் பின்னலாடை உற்பத்தி வடமாநிலங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
குளிர்கால ஆர்டர்களை பொறுத்தவரை, திருப்பூருக்கு குறைவான ஆர்டர் மட்டும் கிடைக்கும். 'ஸ்வெட்டர்' உல்லன் மற்றும் தடிமனான பின்னலாடைகள் உற்பத்தி, லுாதியானாவில் தான் அதிகம்; குளிர்கால ஆர்டர்கள் அம்மாநிலத்துக்கு அதிகம் கிடைத்து வந்தது. கோடைக்காலத்தில், பருத்தி நுாலிழை ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர்.
பின்தங்கிய திருப்பூர்
திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளுக்கு, கோடைக்காலத்தில் நாடு முழுவதும் கிராக்கி இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, பாலியஸ்டர் ஆதிக்கம் துவங்கிய பிறகு, வரவேற்பு குறைந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு கோடைக்கால விற்பனையில், திருப்பூர் சற்று பின்தங்கிவிட்டது. இதேநிலை தொடர்ந்தால், கோடைக்கால ஆர்டர் பெறுவதிலும் வடமாநிலங்கள் முன்னேறிவிடும்.
வடமாநிலங்களில், பின்னல் துணி உற்பத்தியாளர்கள் அதிகம். ஒவ்வொரு மாதமும், புதிய 10 டிசைன்களில் துணிகள் உற்பத்தி செய்கின்றனர். திருப்பூரை பொறுத்தவரை, பருத்தி நுாலிழையில் குறிப்பிட்ட ரகத்தை மட்டுமே சார்ந்துள்ளது.
திருப்பூரில், பாலியஸ்டர் துணி உற்பத்தி குறைவு என்பதால், விலை அதிகம். வடமாநிலங்களில் இருந்து மொத்தமாக வாங்கும் போது, விலை குறைவாக கிடைக்கிறது. குறு உற்பத்தியாளர், மொத்த கொள்முதல் செய்யவும் வாய்ப்பில்லை.
புதிய தொழில்நுட்பம்
திருப்பூர் பின்னலாடைத் தொழில் நீடித்து நிலையாக இருக்க வேண்டுமெனில், பாலியஸ்டர் தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும். திருப்பூரிலேயே, புதிய டிசைன்களில் பாலியஸ்டர் பின்னல் துணி உற்பத்தி வேகமெடுக்க வேண்டும்.
அதுவரை, வடமாநிலங்களில் உற்பத்தியாகும் பாலியஸ்டர் துணி ரகங்கள், திருப்பூருக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். அப்போதுதான், நேர்த்தியான, மிகத்தரமான பாலியஸ்டர் ஆடை தயாரிப்பின் வாயிலாக, வடமாநில சந்தைகளை திருப்பூர் கையில் வைத்திருக்க முடியும் என, உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
செயற்கை நுாலிழை துணி உற்பத்தி மேம்பாடு அவசியம்