/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றியமைக்கப்பட்ட கோசாலை மேற்கூரை
/
மாற்றியமைக்கப்பட்ட கோசாலை மேற்கூரை
ADDED : நவ 15, 2025 01:08 AM

திருப்பூர்: கோசாலை மேற்கூரை டிசைன் மாற்ற பொறியியல் பிரிவு உத்தரவிட்டதால், வீரராகவப்பெருமாள் கோவிலில், கூடுதல் இரும்பு ஆங்கில் பொருத்தி, மேற்கூரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அறங்காவலர் குழு மற்றும் கோவில் நிர்வாகத்தின் முடிவின்படி, புதிய கோசாலை, அன்னதான கூடம், கோவில் அலுவலகம், ஆழ்துளை கிணறு போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
முதல்கட்டமாக, வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், பழைய கோசாலையை அகற்றிவிட்டு, 19.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரிய கோசாலை அமைக்கும் பணி துவங்கியது.
தரையில் இருந்து கான்கிரீட் துாண்கள் கட்டப்பட்டு, அதன்மீது, இரும்பு ஆங்கில் பொருத்தி, கேரள மாடலில், கோசாலை அமைக்கப்பட்டது.
இரும்பு ஆங்கில் பொருத்தி, மண் ஓடு வேய்ந்த நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளை திருத்தம் செய்ய உத்தரவிட்டனர்.
ஓடு வேய்ந்த பிறகு, எடையை தாங்கும் அளவுக்கு, மத்தியில் துாண்கள் இல்லை. எனவே, புதிய மதிப்பீடு தயாரித்து, பணிகளை மாற்றி அமைக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை பொறியியல் பிரிவு அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
அதன்படி, கோசாலையில் திருத்தியமைக்கப்பட்ட பணிகள் நடந்து வருகின்றன. கோசாலை மேற்கூரையின் எடையை தாங்க ஏதுவாக, மையப்பகுதியில் கூடுதலாக இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் மேற்பார்வைக்கு பிறகு, கூரையில் ஓடு வேயப்பட்டுள்ளது. விரைவாக, தரையிலும் பணிகள் வேகப்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவில் செயல் அலுவலர் வனராஜாவிடம் கேட்டபோது,''பொறியியல் பிரிவு அலுவலர்கள் அறிவுறுத்தலின்படி, கோசாலையின் டிசைன் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, திருத்திய மதிப்பீடு தயாரித்து பணிகள் நிறைவு செய்யப்படும்.
தற்போது, இரும்பு ஆங்கில் பொருத்தி, மேற்கூரையில் ஓடு வேயும் பணிகள் நடந்து முடிந்துள்ளன; விரைவில் பணிகள் நிறைவு செய்யப்படும்,'' என்றார்.

