/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணம் இரட்டிப்பு மோசடி; ஏமாந்தவர்கள் புகார் தரலாம்
/
பணம் இரட்டிப்பு மோசடி; ஏமாந்தவர்கள் புகார் தரலாம்
ADDED : ஆக 18, 2025 10:34 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பணம் இரட்டிப்பு மோசடி தொடர்பாக புகார் அளிக்க மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
காங்கயம், காடையூரை சேர்ந்தவர் தீபக் திலக், 45. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 'பி.டி.எம்., குரூப் ஆப் நிறுவனம்' எனும் பெயரில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிதி நிறுவனத்தை துவங்கினார். இதன் கிளைகளை திருப்பூர், ஈரோடு, சேலம் என, பல இடங்களில் துவங்கினார். அதில், 2 ஆயிரம் முதல் பல லட்சங்கள் ரூபாய் வரை முதலீடு செய்தால், குறிப்பிட்ட மாதங்களுக்கு பின், முதலீடு தொகை இரட்டிப்பு செய்து வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தனர்.
இதை நம்பி, தமிழகம் முழுவதும் பலர் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. பல இடங்களில் மோசடி தொடர்பாக முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளிக்க ஆரம்பித்தனர். தீபக் திலக் உள்ளிட்ட சிலரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
n திருப்பூர் பி.என்., ரோட்டில் செயல்பட்டு வந்த மாமு எக்ஸ்போ மற்றும் மாமு நிதி நிறுவனத்தினை நடத்தி வந்த முத்தையன், அவரது மனைவி, மகன் உள்ளிட்டோர், ஆண்டுக்கு, 12 சதவீதம் வட்டி தருவ தாகவும், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என பல லட்சம் ரூபாயை ஏமாற்றினர். இதில், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
n பெருமாநல்லுார் - பொங்குபாளையத்தில் உள்ள ஸ்ரீ ரங்கா ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் விஜயா கார்டன் என்ற பெயரில் வீட்டு மனைகளாக பிரித்து மாதத் தவணைகளாக மக்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றினர்.
இந்த மூன்று மோசடி வழக்குகள் தொடர்பாக திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவர்களிடம் ஏமாந்து உள்ள மக்கள் புதிதாக புகார் கொடுக்க அசல் ஆவணங்களுடன் நேரடியாக அவிநாசி - திருப்பூர் ரோடு, ராணி பில்டிங் மூன்றாவது தளத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

