ADDED : அக் 10, 2024 05:58 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல், தினந்தோறும் வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது.
நேற்றுமுன்தினம், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 20.14 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலக சுற்றுப்பகுதிகளில், 68.40 மி.மீ.,க்கு கனமழை பெய்துள்ளது. அவிநாசியில் 47; வட்டமலைக்கரை ஓடையில் 44.40; குண்டடத்தில் 38; மூலனுாரில் 32; உப்பாறு அணை பகுதியில் 28; ஊத்துக்குளி தாலுகா அலுவலக பகுதிகளில் 21.50; காங்கயம் தாலுகா அலுவலக பகுதிகளில் 17.40 மி.மீ.,க்கு மிதமான மழை பதிவாகியுள்ளது.
பல்லடம் தாலுகா அலுவலக பகுதிகளில் 15 மி.மீ.,- திருமூர்த்தி அணை பகுதியில் 15; திருமூர்த்தி அணை (ஐ.பி.,) 14; உடுமலை தாலுகா அலுவலக பகுதிகளில் 13.20; திருப்பூர் - அவிநாசி ரோடு கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 10.80; மடத்துக்குளத்தில் 8; திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 6; தாராபுரம் தாலுகா அலுவலக பகுதிகளில் 6; கலெக்டர் அலுவலக சுற்றுப்பகுதியில் 5; நல்லதங்காள் ஓடையில் 5; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 4; அமராவதி அணையில் 4 மி.மீ.,க்கு லேசான மழையாக பெய்துள்ளது.
மரம் சாய்ந்தது
கடந்த ஒரு வாரமாக பொங்கலுார் வட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பெருந்தொழுவில் 50 ஆண்டுகால வேப்ப மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. அருகில் பகுதிநேர சுகாதார நிலையம், குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவை உள்ளன. அவற்றுக்கு சிறிய அளவில் மட்டுமே சேதம் ஏற்பட்டது. நிழலில் நிறைய வாகனங்களை பொதுமக்கள் நிறுத்தி இருந்தனர். வாகனங்களுக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
பெருந்தொழுவு பஸ் ஸ்டாப்பில் இருந்த வேப்ப மரத்தின் கிளையும் ஒடிந்து ரோட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.