ADDED : ஜன 23, 2026 05:38 AM
திருப்பூர்: பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு வாரமாகியுள்ள நிலையில், காய்கறிகள் வரத்து இயல்புக்கு திரும்பி வருகிறது. தை பிறந்தும், பனியின் தாக்கம் தொடர்வதால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து அதிகளவில் காய்கறிகள் மார்க்கெட்டுக்கு வருகிறது.
வெளிமார்க்கெட்டில் கேரட், பீன்ஸ், ஊட்டி பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி விலை குறைவாக இருப்பதால், உழவர் சந்தையிலும் விலை குறைந்துள்ளது. நள்ளிரவு, அதிகாலையில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், இத்தகைய காய்கறிகளை இருப்பு வைக்க முடியாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் 20 ரூபாய் குறைந்து, 40 ரூபாயாகியுள்ளது. பீன்ஸ், கிலோ, 70 ரூபாயில் இருந்து, 55 ரூபாயாக குறைந்துள்ளது. பீட்ரூட் கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்து, 40 ரூபாய். தக்காளி வரத்து மிகுதியாகிக் கொண்டிருப்பதால், மொத்த விலையில், நான்கு கிலோ, 100 ரூபாய்க்கும், சில்லறை விலையில், கிலோ, 30 ரூபாய்க்கும் தக்காளி விற்கப்படுகிறது.
அதே நேரம், பீர்க்கன், கொத்தவரை, வெண்டை, பாகற்காய் விலையில் மாற்றமில்லை. வரத்துக்கு ஏற்ப விற்பனையும் இருப்பதால், சின்ன வெங்காயம் கிலோ, 40 ரூபாய். பெரிய வெங்காயம் கிலோ, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

