/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருளில் தவிக்கும் மலைவாழ் கிராமங்கள்! 'சோலார் பேனல்' பழுதால் பாதிப்பு
/
இருளில் தவிக்கும் மலைவாழ் கிராமங்கள்! 'சோலார் பேனல்' பழுதால் பாதிப்பு
இருளில் தவிக்கும் மலைவாழ் கிராமங்கள்! 'சோலார் பேனல்' பழுதால் பாதிப்பு
இருளில் தவிக்கும் மலைவாழ் கிராமங்கள்! 'சோலார் பேனல்' பழுதால் பாதிப்பு
ADDED : மார் 01, 2024 12:19 AM

உடுமலை;அடர்ந்த வனப்பகுதியில், மின்வசதி இல்லாத, மலைவாழ் கிராமங்களுக்கு ஒரே ஆதாரமாக இருக்கும், 'சோலார் பேனல்' களும் பழுதடைந்து, மாற்றப்படாமல் இருப்பதால், இருட்டில் தவிக்க வேண்டிய நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. தளிஞ்சி, மாவடப்பு, குருமலை, குழிப்பட்டி, ஈசல்திட்டு உட்பட குடியிருப்புகளில், தலா, 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
அடர்ந்த வனப்பகுதியில், இருப்பதால், இங்குள்ள குடியிருப்புகளுக்கு, மின்சார வசதி இல்லை. சிறிய விளக்குகளை எரிக்க மண்ணெண்ணெய் வினியோகமும் இல்லை. இதனால், மாலை நேரத்திலேயே வீடுகளுக்குள் முடங்கும் அவல நிலை தொடர்கதையாக உள்ளது.
மலைவாழ் கிராம குழந்தைகள், படிக்கத்துவங்கிய பிறகு, இரவு நேரங்களில், மின்விளக்குகள் தேவை கட்டாயமானது.
சில ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான மலை கிராமங்களுக்கு, சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்து, விளக்குகளை பயன்படுத்த தேவையான 'சோலார் பேனல்'கள் அரசால், வழங்கப்பட்டன.
இம்முறையில், தெருவிளக்குகளும், வீடுகளுக்கான 'பேனல்'களும் அமைக்கப்பட்டன. பல்வேறு பயன்களை அளித்து வந்த 'பேனல்'களை, பராமரிப்பது குறித்து அப்பகுதி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு பின், 'சோலார் பேனல்'கள், படிப்படியாக பழுதடையத்துவங்கின.
பழுதுகளை சரிபார்க்கும் தொழில்நுட்பம் தெரியாததால், பல மலைவாழ் குடியிருப்புகளில், தெருவிளக்குகள் தற்போது எரிவதில்லை. வீடுகளுக்கு வழங்கப்பட்ட 'பேனல்'களும், அடிக்கடி பழுதடைவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
தெருவிளக்குகளும் காட்சிப்பொருளாகி, வீட்டு விளக்குகளும் முடங்கியுள்ளதால், மலைவாழ் கிராமங்கள் இருளில் மூழ்கி வருகின்றன.
எனவே அக்கிராமங்களில், கணக்கெடுப்பு நடத்தி, பழுதடைந்த சோலார் பேனல்களை புதுப்பிக்கவும், கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்கவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

