/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கும் குப்பை மலை... எப்போது மாறும் நிலை?
/
எங்கும் குப்பை மலை... எப்போது மாறும் நிலை?
ADDED : ஜூன் 13, 2025 10:52 PM

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கொண்டு சென்று கொட்டும் இடங்களில் எதிர்ப்பு காரணமாக நகரப் பகுதி முழுவதும் குப்பைகள், மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. தினமும் சராசரியாக, 800 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகிறது.
இவற்றில் தரம் பிரிக்கப்பட்ட காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகள் நுண் உர உற்பத்தி மையங்களில் கையாளப்படுகிறது. மேலும் பயோ காஸ் உற்பத்தி மையத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர தரம் பிரிக்கப்படும் காகித, அட்டை உள்ளிட்டவை ஊழியர்களால் பிரித்து எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பாறைக்குழியே துணை
பிற குப்பைகள், நகரைச் சுற்றிலும் உள்ள பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டி நிரப்பப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள், ஊரெங்கும் உள்ள பயன்பாடில்லாத பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டி நிரப்பி மூடப்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் தற்போது பாறைக்குழி இருந்த சுவடே தெரியாமல் வேறு வகையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இழுபறி நிலைமை
இந்நிலையில், காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டி நிரம்பும் நிலையில் உள்ளது. தற்போது, சில அமைப்புகளின் கடும் எதிர்ப்பால், குப்பை அப்பகுதியில் கொட்டுவதில் இழுபறி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக வேறு பகுதிகளான நெருப்பெரிச்சல், மொரட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளுக்கு குப்பை கழிவுகள் கொண்டு சென்ற போது அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அகற்றப்படாமல் தேக்கம்
இதனால், திருப்பூர் நகரமெங்கும் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. பாறைக்குழிகளுக்கு குப்பையை ஏற்றிச் சென்ற வாகனங்கள் குப்பை லோடு டன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கிய வீதிகளில், ரோட்டோரங்களில், குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. கேட்பாரற்ற காலியிடங்களிலும் குப்பைகளை சில பகுதிகளில் குப்பை கழிவுகள் கொண்டு சென்று குவிக்கப்பட்டுக் கிடக்கிறது.
வீதிகள் அலங்கோலம்
கடந்த நான்கு நாட்களாக தேங்கிய குப்பைகள் நகர வீதிகளில் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. லேசான மழை பெய்தால் கூட துர்நாற்றம் கிளம்பி மேலும் அவதியை அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை. அதுவரை மேலும் சில குப்பை மலைக்கு உருவாவதற்கு பஞ்சமில்லை.